ஷா ஆலாம், ஆகஸ்ட் -30 – சிலாங்கூர், செத்தியா ஆலாமில் நேற்று முன்தினம் 12 வயது சிறுவன் கடத்தப்பட்டதாக வைரலான செய்தியை போலீஸ் மறுத்துள்ளது.
உண்மையில் அவனாகவே வீட்டை விட்டு ஓடியுள்ளான் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டதாக, ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் ரம்சே எம்போல் (Ramsay Embol) தெரிவித்தார்.
சம்பவத்தன்று அருகிலுள்ள பள்ளிவாசலுக்கு அல்-குர் ஆன் ஓதச் சென்றவன், நெடு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
கடைசியில் பார்த்தால், பள்ளிவாசலிலிருந்து நேராக அருகிலுள்ள பேரங்காடிக்கு அவன் தனியாக நடந்துச் சென்றுள்ளான்.
அங்கு அவனைத் தனியாகக் கண்ட இரு ஆடவர்கள், அவனை மீட்டு அருகிலுள்ள எண்ணெய் நிலையக் கடையில் சாப்பிட உணவும் வாங்கிக் கொடுத்தனர்.
ஆனால் அப்பையனோ, எங்கே தான் ஓடிப் போனது தெரிந்தால் அப்பா திட்டுவாரோ என பயந்து, தன்னை இரு ஆடவர்கள் கடத்தியதாகப் பொய் சொல்லியுள்ளான்.
இதையடுத்து போலீசில் தந்தை புகார் செய்ய, எண்ணெய் நிலைய CCTV கேமராவை பரிசோதித்து கடத்தல் முயற்சி எதுவும் நிகழவில்லை என போலீஸும் உறுதிச் செய்தது.
அப்பையனுக்கு உதவியதாகக் கூறப்பட்ட ஆடவர்களை அடையாளம் கண்டு வாக்குமூலம் பதிவுச் செய்த போலீஸ், மேல் நடவடிக்கை இல்லை (No further action) என்ற முடிவுக்கு வந்துள்ளது.
2 வெளிநாட்டு ஆடவர்கள் ஒரு சிறுவனைக் காரில் வைத்து கடத்திச் சென்றதாக சமூக ஊடகங்களில் முன்னதாக செய்தி வைரலானது.