Latestமலேசியா

செந்தமிழ் விழா போன்ற தமிழ்பள்ளி நிகழ்ச்சிக்கு மாநில கல்வி இலாகா மானியம் வழங்க வேண்டும் – DSK சிவகுமார்

கோம்பாக், ஜூலை-18- சிலாங்கூரில், மாவட்ட ரீதியில் நடைபெறும் செந்தமிழ் விழாவுக்கு மாநில கல்வி இலாகா நிதி ஒதுக்காதது ஏன் என, Dinamik Sinar Kasih சமூக நல அமைப்பின் தலைவர் டத்தோ என். சிவகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

கல்வி அமைச்சின் முக்கிய முன்னெடுப்புகளில் ஒன்றான இந்நிகழ்ச்சி, தமிழ்ப் பள்ளி மாணவர்கள் மத்தியில் தாய்மொழி மீதான பற்றை விதைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் சுழல் முறையில் மாவட்டப் பள்ளிகள் இவ்விழாவை ஏற்று நடத்தி வருகின்றன;

ஆனால், இதற்கென கல்வி இலாகா நிதி ஒதுக்காததால், நிதி திரட்டும் சுமை, விழாவை ஏற்று நடத்தும் பள்ளிகள் மேல் விழுகிறது.

ஆசிரியர்கள் ஏற்கனவே பணிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்; அதனை மேலும் அதிகரிக்கும் வகையில் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு நிதிகளைத் திரட்ட அவர்களை வற்புறுத்துவது நியாமல்ல.

எனவே, மாநில கல்வி இலாகா இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட நிதியை ஒதுக்கி, பள்ளிகள் குறிப்பாக ஆசிரியர்களின் சுமையைக் குறைக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

பத்து மலை தமிழ்ப்பள்ளியில் நேற்று நடைபெற்ற கோம்பாக் மாவட்ட அளவிலான செந்தமிழ் விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றியப் பிறகு, டத்தோ சிவகுமார் அவ்வாறு பேசினார்.

இதனிடையே, தாய்மொழியாம் தமிழ் மொழியின் மாண்பை மேம்படுத்தும் இது போன்ற முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில், கோம்பாக் செந்தமிழ் விழா ஏற்பாட்டுக் குழுவுக்கு 10,000 ரிங்கிட் நிதியை அவர் வழங்கினார்.

நேற்றைய நிகழ்வில் கோம்பாக் மாவட்டத்தைச் சேர்ந்த 7 தமிழ்ப் பள்ளிகளும் 5 தேசியப் பள்ளிகளும் கலந்துகொண்டன.

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பேச்சுப் போட்டி, கவிதை ஒப்புவித்தல் போட்டி, கதைச் சொல்லும் போட்டி, இசைப் படைப்புகள், பரதநாட்டியம், கோலாட்டம் போன்ற அம்சங்களால் இந்த செந்தமிழ் விழா களைக் கட்டியது.

தமிழ் மொழியைப் போற்றும் வகையில் நடத்தப்பட்ட இந்நிகழ்வு குறித்து வணக்கம் மலேசியாவிடம் பேசிய பத்து மலைத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியை சரஸ்வதி செங்கல்ராயன், டத்தோ சிவக்குமாரின் ஆதரவுக்கும் நன்றித் தெரிவித்தார்.

பத்து மலைத் தமிழ்ப் பள்ளியும் கோம்பாக் மாவட்ட தமிழ் மொழிக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த செந்தமிழ் விழாவில், மாநில கல்வி இலாகாவின் மொழிப் பிரிவு இயக்குநர் வீ. செங்குட்டுவனும் சிறப்பு பிரமுகராகப் பங்கேற்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!