Latestஉலகம்

சென்னையில் AI மாநாடு: தமிழகத்தில் முதன்முறையாக உலகத் தரம் வாய்ந்த பிரமாண்ட மாநாடு

கோலாலாம்பூர், ஜூன்-12-எதிர்கால தொழில்நுட்ப உலகை வடிவமைக்கும் நோக்கில், தமிழகத்தில் முதன்முறையாக உலகத் தரம் வாய்ந்த பிரமாண்ட செயற்கை நுண்ணறிவு மாநாடான Chennai AI Summit 2026 நடைபெறவுள்ளது.

வரும் ஆகஸ்ட் 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் சென்னையில் இது நடைபெறுகிறது.

AI தொழில்நுட்பத் துறையின் அடுத்தகட்ட வளர்ச்சி மற்றும் புதியத் தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் உன்னத நோக்கில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அனைத்துலகத் தமிழ் வர்த்தகர் சங்கத் தலைவர் ஜே. செல்வகுமார் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.

இதில் உலகின் முன்னணி AI நிறுவனங்கள், அனைத்துலகத் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் பலரும் ஒன்றிணையவுள்ளனர்.

குறிப்பாக, நவீன மருத்துவத் துறை, இணையப் பாதுகாப்பு, செமிகண்டக்டர் தொழில்நுட்பம் மற்றும் ஊடகம்-தொடர்புத் துறைகளில் AI தொழில்நுட்பத்தின் பங்களிப்பு குறித்து விரிவான அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

இந்த மாநாட்டில் யாரெல்லாம் கலந்துகொண்டு பயனடையலாம் எனக் கேட்டதற்கு, தகவல் தொழில்நுட்பம் படித்தவர்கள் தொடங்கி சாமானியர்கள் வரை தாராளமாக வரலாம் என்றார் அவர்..

சென்னையில் நடந்தாலும், உலகின் எந்த மூலையிலிருந்தும் ஆர்வமுள்ளோர் வந்து இதில் பங்கேற்கலாம்; கட்டணமும் மிக மலிவானதே என செல்வகுமார் சொன்னார்.

இந்த AI உலகில் வந்துள்ள அனைத்து புதுமைகளையும் கண்காட்சி வடியில் இந்த மாநாட்டில் காண முடியும் எனக் கூறிய செல்வகுமார், மலேசியா வந்ததற்கான காரணத்தையும் கூறினார்.

செமிகண்டக்டர் துறையில் இந்தியா – மலேசியா இடையில் இருவழி ஒத்துழைப்பு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், எதிர்கால வேலை வாய்ப்புகளைப் பற்றி தெரிந்துக்கொள்ள இம்மாநாடு மலேசியர்களுக்குக் குறிப்பாக மாணவர்களுக்குப் பயனாக இருக்குமென்றார்.

இந்த மாநாட்டுக்கான, மலேசியாவின் டிஜிட்டல் ஊடகப் பங்காளியாக வணக்கம் மலேசியா விளங்குவது கூடுதல் சிறப்பாகும்…

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், AI பல்கலைக்கழகம் அமைக்கும் முன்னோடித் திட்டத்தை முன்வைத்துள்ள நிலையில், இந்த மாநாடு நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதாகவும் செல்வகுமார் கூறினார்.

எனவே, மிகவும் பயனுள்ள இந்த மாநாட்டில் பங்கேற்க விரும்புவோர் திரையில் காணும் விவரங்களைத் தொடர்புகொள்ளவும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!