
கோலாலம்பூர், ஜூன்-12-மாணவர்களிடையே சாலை விதிமுறைகளை வலுப்படுத்தும் நோக்கில், கோலாலம்பூர் மாநகரிலுள்ள 122 இடைநிலைப் பள்ளிகளில் போக்குவரத்து போலீஸாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படவுள்ளது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளை உள்ளடக்கிய இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம், பள்ளி வளாகங்களில் போக்குவரத்து நெரிசலை சீர்செய்வதோடு, மாணவர்களின் ஓட்டுநர் உரிமம் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் தொழில்நுட்ப தகுதிகளும் சோதிக்கப்படும்.
இளம் தலைமுறையினர் பள்ளிப் பருவத்திலிருந்தே சட்டங்களை மதிக்க கற்றுக்கொள்வதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது என, கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சூஸ் தெரிவித்தார்.
செராஸ், அலாம் டாமாய் இடைநிலைப் பள்ளியில் நடைபெற்ற, 2026-ஆம் ஆண்டுக்கான போக்குவரத்து விழிப்புணர்வு பிரச்சாரத் தொடக்க விழாவில் அவர் இதனை வலியுறுத்தினார்.
இதற்கிடையில், இவ்வாண்டு ஜனவரி முதல் மே வரையிலான காலக்கட்டத்தில், ஆபத்தான முறையில் வாகனமோட்டியதாகக் கூறி 41 கைது நடவடிக்கைகள் பதிவாகியுள்ளன.
இது, கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தோடு ஒப்பிடுகையில் சரிவாகும்.
சட்டவிரோத பந்தயங்களில் ஈடுபடாமல், பொறுப்புள்ள மாணவர்களை உருவாக்குவதற்கு இந்த கூட்டு முயற்சி பெரிதும் உதவும் என கூட்டரசு பிரதேச கல்வி இலாகாவும் ஆதரவு தெரிவித்துள்ளது.



