Latestமலேசியா

சிப்பாங் F1 பந்தயத்திற்கான ஏற்பாடுகளுக்கு மலேசியாவுக்கு RM16 மில்லியன் மட்டுமே தேவை – பிரதமர் அன்வார்

தம்பின், ஜூலை-27-Formula One போட்டியின் ஒரு பந்தயத்தை ஏற்று நடத்த சிப்பாங் அனைத்துலக பந்தயப் பாதையைத் தயார் செய்ய மலேசியா சுமார் 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே செலவிட வேண்டியிருக்கும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

பிராந்திய பாதுகாப்பு கவலைகள் காரணமாக தனது Grand Prix போட்டியை மலேசியாவுக்கு மாற்ற முடிவு செய்த பஹ்ரைன், அனைத்துலக வாகன கூட்டமைப்பிற்கு (FIA) செலுத்த வேண்டிய பெரும் தொகையைத் தானே ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்டுள்ளது.

இதன் மூலம், சிப்பாங் பந்தயப் பாதையில் சிறிய அளவிலான பராமரிப்புப் பணிகளை மட்டுமே மலேசியா மேற்கொள்ள வேண்டியிருக்கும் என பிரதமர் குறிப்பிட்டார்.

நூற்றுக்கணக்கான மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஆரம்பக் கட்டக் கட்டணத்தை பஹ்ரைன் ஏற்கனவே F1 நிர்வாகத்திடம் செலுத்தி விட்டது. அத்தொகையை நாம் செலுத்த வேண்டியதில்லை.

ஏதேனும் செலவு இருந்தால், அது பந்தயப் பாதையில் மேற்கொள்ளப்படும் சிறிய பழுதுபார்ப்புப் பணிகளுக்கு மட்டுமே. ஏனெனில் இப்பாதை தற்போது பிற பந்தய நிகழ்வுகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே பழுது பார்ப்பு பணிகளுக்கான செலவு 10 மில்லியன் முதல் 16 மில்லியன் ரிங்கிட் வரை இருக்கும் என எதிபார்க்கப்படுகிறது. F1 பந்தயங்களை நடத்தும் நாடுகள் வழக்கமாகச் செலவிடும் தொகையை விட இத்தொகை மிகக் குறைவு என அன்வார் சுட்டிக் காட்டினார்.

பந்தயம் நெடுகிலும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதே அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்கும். பாதுகாப்புப் பணிகளிலும், அணிகள் மற்றும் பார்வையாளர்களின் வருகையைச் சீராக நிர்வகிப்பதிலும் ஆயுதப் படைகள், காவல்துறை, குடிநுழைவுத் துறை மற்றும் சுங்கத் துறை ஆகியவை முக்கியப் பங்காற்றும் என்றாரவர்.

2026-ஆம் ஆண்டுக்கான பந்தய அட்டவணையில், Bahrain Grand Prix பந்தயத்திற்கு மாற்றாக சிப்பாங் தளம் பந்தயத்தை நடத்தும் என F1 மற்றும் அதன் நிர்வாக அமைப்பான FIA நேற்று அறிவித்தன.

2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு அப்பிரசித்தி பெற்ற பந்தயம் சிப்பாங் தளத்திற்குத் திரும்புவது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!