ஜியோர்ஜ்டவுன், ஜூலை 27 -செப்டம்பரில் மழைக்காலம் தொடங்கும் வரை, தண்ணீர் பயன்பாட்டை 10% குறைத்துக் கொள்ளுமாறு பினாங்கு மக்கள் மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பினாங்கு நீர் விநியோகக் கழகத்தின் (PBAPP) தலைமை நிர்வாக அதிகாரி கே.பத்மநாதன் அவ்வாறு கேட்டுக் கொண்டார்.
ஜனவரியிலிருந்து கடந்த மாதம் வரை பினாங்கில் சராசரி தண்ணீர் பயன்பாடு நாளொன்றுக்கு 887 மில்லியன் லிட்டராக உள்ளது.
இதே கடந்தாண்டில் 877 மில்லியன் லிட்டராக அது இருந்தது.
ஆக ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் சராசரி தண்ணீர் பயன்பாடு நாளொன்றுக்கு 10 மில்லியன் லிட்டராக உயர்ந்திருப்பதை பத்மநாதன் சுட்டிக் காட்டினார்.
இந்த 10 மில்லியன் லிட்டர் நீரைக் கொண்டு, ஒவ்வொரு நாளும் 6,667 பெரிய 1.5 லிட்டர் நீர் பாட்டில்களை நிரப்ப முடியும்.
பயனீட்டார்கள் தண்ணீர் பயன்பாட்டை 10% குறைப்பதன் மூலம் நாளொன்றுக்கு 50 மில்லியன் லிட்டர் நீரைச் சேமிக்க முடியும்.
அதன் வாயிலாக செப்டம்பரில் மழைக்காலம் தொடங்கும் வரை தண்ணீர் கையிருப்பு போதிய அளவில் இருப்பதை உறுதிச் செய்ய முடியுமென்றார் அவர்.