கோலாலம்பூர், டிசம்பர்-20, கோலாலம்பூர், செப்பூத்தேவில் அரசாங்க நிலத்தில் 5 வீடுகளில் சட்டவிரோதமாக எழுப்பப்பட்ட கட்டுமானங்கள் இடிக்கப்பட்டுள்ளன.
DBKL எனப்படும் கோலாலம்பூர் மாநகர மன்றம் தலைமையில் போலீஸ், TNB, சிலாங்கூர் நீர் விநியோக நிறுவனம், SWCorp எனும் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது சுத்திகரிப்புக் கழகம் ஒருங்கிணைந்து புதன்கிழமை அந்நடவடிக்கையை மேற்கொண்டன.
அவற்றில் 4 வீடுகள், பொது கால்வாய் மற்றும் நடைபாதையை மறைக்கும் அளவுக்கு வீட்டை இழுத்துக் கட்டியிருந்தன.
மற்றொரு வீடோ, DBKL அங்கீகரித்த வரைபடத்தைப் பின்பற்றாமல் மாற்றியமைக்கப்பட்டிருந்தது.
மேற்கண்ட 5 வீடுகளைத் தவிர்த்து, மேலும் 7 வீடுகளுக்கு 1974-ஆம் ஆண்டு சாலை, கால்வாய் மற்றும் கட்டிட சட்டத்தின் கீழ் DBKL நோட்டீஸ் வழங்கியது.
மறைக்கப்பட்டுள்ள சாலையில் DBKL மறு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, தாங்கள் சட்டவிரோதமாக நிறுவியுள்ள கட்டுமானங்களை சொந்தமாகவே அகற்றி விடுமாறு அதில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இவ்வேளையில், இதே போன்ற மற்றொரு நடவடிக்கையில் கம்போங் பாருவில் உள்ள Jalan Raja Muda Musa மற்றும் Jalan Raja Alang-கில் நடைபாதைகளை மறைத்த அங்காடி வியாபாரிகளின் பொருட்கள் சீல் வைக்கப்பட்டன.
மக்கள் நடந்து செல்லும் பாதையில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் மேசை நாற்காலிகள், கனோப்பி கூடாரங்கள், தள்ளுவண்டிகள், எரிவாயு தோம்புகள் ஆகியவை அவற்றிலடங்கும்.
பொது மக்கள் கொடுத்த புகாரை அடுத்து அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக DBKL தனது facebook பக்கத்தில் கூறியது.