
புத்ராஜெயா, ஜூலை-2 – தனது பதவிக் காலம் முழுவதுமோ அல்லது சேவை நீட்டிக்கப்படாதது குறித்தோ தமக்கு எந்த வருத்தமும் இல்லை என, கட்டாய பணி ஓய்வுப் பெற்றுள்ள நாட்டின் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் கூறியுள்ளார்.
தம்மைப் பொருத்தவரை, நாட்டின் 16-ஆவது தலைமை நீதிபதியாக சேவையாற்றியது தமக்குக் கிடைத்த பெருமை மற்றும் கௌரவம் என்றார் அவர்.
புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்ற வளாகத்தில், தனது கடைசி வேலை நாளான நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
“மேலும் 6 மாதங்களுக்கு சேவை நீட்டிக்கப்படவில்லையே என்ற வருத்தமோ கவலையோ துளியும் இல்லை; நான் பதவி வகித்த 6 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 6 மாதங்கள் என்பது ஒரு பெரிய விஷயமே அல்ல” என்றார் அவர்.
ஓய்வுப் பெறுவது தொடர்பில் பொது மக்களிடமிருந்து பெற்ற கருத்துகளும், வழக்கறிஞர்களின் கருத்துக்களையும் பார்க்கும் போது, நாட்டின் நீதி பரிபாலன துறை மீதான நம்பகத்தன்மையை நான் ஓரளவுக்கு அதிகரித்திருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது;
தமக்குப் பிறகு அப்பொறுப்புக்கு வருபவரும் அதைத் தொடருவார் என தாம் நம்புவதாக தெங்கு மைமுன் சொன்னார்.
தெங்கு மைமுனுக்கு கட்டாய பணி ஓய்வு வயதான 66 வயது இன்று பூர்த்தியாகிறது.
நாட்டின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற முதல் பெண் என 2019-ஆம் ஆண்டு
இவர் வரலாறு படைத்தவர் ஆவார்.
தெங்கு மைமுனுக்கு பதிலாக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் அபாங் இஸ்கண்டார் அபாங் ஹஷிமும் இன்று ஓய்வுபெறுகிறார்.
கூட்டரசு நீதிமன்ற மூத்த நீதிபதியான நளினி பத்மநாதனோ வரும் ஆகஸ்டில் ஓய்வுப் பெறுகிறார்.
ஆக புதியத் தலைமை நீதிபதியாக யார் பொறுப்பேற்பார் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.