
ஷா ஆலாம், ஜூலை-1 – சைபர்ஜெயாவில் 20 வயது பல்கலைக்கழக மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபர், தனது காதலி வழங்கிய சாவி மற்றும் access அட்டையைப் பயன்படுத்தி அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்துள்ளார்.
சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமார் கான் அதனைத் தெரிவித்தார்.
காதலி, கொலையுண்ட பெண்ணின் அதே வீட்டில் வசித்து வந்துள்ளதோடு, தேர்வுகள் முடிந்ததும் தனது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார்.
இந்நிலையில், கொலையுண்ட மாணவி தனது இறுதித் தேர்வுக்காக அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருப்பதை, சந்தேக நபர் பயன்படுத்திக் கொண்டார் என ஓமார் கான் சொன்னார்.
ஏற்கனவே பல முறை அங்கு அவர் தங்கியிருந்ததால், அந்த இடத்தை அவர் நன்கு அறிந்திருந்தார்; இதுவே, ஜூன் 24 இரவு அவருக்கு வசதியாகப் போனது.
அப்பெண்ணைத் தாக்கி கொலைச் செய்ததாகக் கூறப்படும் வேலையில்லாத அவ்வாடவர், அம்மாணவியைக் கொள்ளையடித்து, அவரது கைப்பேசி, மடிக்கணினி மற்றும் வங்கி ATM அட்டையையும் எடுத்துச் சென்றுள்ளார்.
அந்த ATM அட்டையைப் பயன்படுத்தி அந்நபர் RM200 செலவழித்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
திருடப்பட்ட பொருட்களில் சில பின்னர் மீட்கப்பட்டன; மற்றவை அழிக்கப்பட்டு விட்டதாக நம்பப்படுவதாக டத்தோ ஓமான் கான் கூறினார்.
அக்கொலைத் தொடர்பாக, முக்கிய சந்தேக நபர் உட்பட இதுவரை 4 பேர் கைதாகியுள்ளனர்.
கொலையுண்ட மாணவியின் வீட்டுத் தோழர், சந்தேக நபரின் நண்பர் என்று நம்பப்படும் ஒரு பெண், மற்றும் கொலையுண்ட மாணவியை அறிந்த ஆனால் ஒரு தனி வீட்டில் வசித்து வந்த மற்றொரு நபர் ஆவார்.