கெர்லிங், ஆகஸ்ட் 20 – மலேசியாவில் முதல் முறையாக அமையவுள்ள சைவத் திருக்கோயில், சைவ சமயக் கல்லூரிக்கான திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா, நேற்று சைவ ஆகமங்கள் நெறிகளின்படி திருமுறை மந்திரங்கள் ஓதி சிறப்பாக நடைபெற்றது.
இந்த அடிக்கல் நாட்டு விழா கெர்லிங் பட்டணத்தில், இந்து பெருமக்களின் திரளான கூட்டத்துடன், ஒன்பது பேர் கொண்ட அறங்காவலர் குழுவும், அறவாரிய உறுப்பினர்கள் நூறு பேர் மற்றும் நானூறு சித்தாந்த மாணவர் அணியுடன் நடைபெற்றது.
ஐம்பது மில்லியன் பெறுமானமுள்ள இந்த திட்டத்தின் முதற் பகுதியில் சிவன் கோயில், திருமண மண்டபம், தியான மண்டபம், பணியாளர் குடியிருப்பு ஆகியவை நிர்மாணிக்கப்படும்.
மலேசியச் சைவ சமயப் பேரவையும், சைவத் திருக்கோயில் கலைக் கல்வி அறவாரியமும் இணைந்து, மலேசிய இந்து சங்கத்தின் ஆதரவுடன், இந்த சைவத் திருக்கோயில், சைவ சமயக் கல்லூரி திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றனர்.
பொருள் நோக்கம் இல்லாத இத்திட்டத்தில், சமய ஆசிரியர், கோயில் பூசகர், திருமுறை ஓதுவார், தென்னிந்தியச் சமயங்களின் தத்துவத்துறைகள் போன்ற அனைத்துப் பயிற்சிகளும் கட்டணமின்றி வழங்கப்படும்.
இதன்மூலம் எதிர்காலத்தில் இந்துக்களில் இளையோர் முதியோர் அனைவரும் சமயம் அறிந்தவராய் விளங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.