
கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 – சபா மாநிலத்தில் பள்ளி விடுதியில் உயிரிழந்த படிவம் 1 மாணவி ஜாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பான விசாரணையில், பகடிவதை மற்றும் பாலியல் துன்புறுத்தல் கூறுகள் கண்டறியப்பட்டுள்ளதென்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயில் உறுதிப்படுத்தியுள்ளார்.
பள்ளிகள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும் என்றும் பகடிவதை சம்பவங்களை எந்தவொரு தரப்பினரும் மூடி மறைக்க கூடாதென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜாராவின் வழக்கு குறித்த விசாரணை அறிக்கை இன்று காலை வழக்கறிஞர்கள் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பள்ளி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்த ஜாரா மறுநாள் குயின் எலிசபெத் மருத்துவமனையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அதனைத் திடீர் மரணம் என ஆரம்பத்தில் வகைப்படுத்தினர்.
இந்நிலையில் புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறை இயக்குநர் எம். குமார் வெளியிட்ட அறிக்கையின்படி தற்போது பகடிவதை மற்றும் பாலியல் வற்புறுத்தல் கூறுகள் அவரின் மரணத்திற்கு முக்கிய காரணமாக இருக்குமென்று கூறப்படுகின்றது.
மேலும் ஜாராவின் மரணம் உயர் பதவியில் உள்ள நபர்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் அவர் சலவை இயந்திரத்தில் தள்ளப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்ட கூற்றுகளில் எந்த உண்மையும் இல்லை என்று சைஃபுதீன் விளக்கமளித்தார்.
அதிகாரிகள் தங்கள் பணியை முறையாக செய்து வருகின்ற நிலையில் ஆரம்ப விசாரணை காலத்தில் சில செயல்பாடுகள் நிலையான நடைமுறைகளுக்கு (SOP) இணங்காதிருந்தாலும், அது விசாரணையின் நேர்மையை பாதிக்கவில்லை என்றும் சைஃபுதீன் தெரிவித்தார்.