கோலாலம்பூர், ஜூலை-11- நாட்டில் கடந்த ஜூன் 11 வரைக்குமான நிலவரப்படி, பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்பிலான 91 லட்சம் கோவிட்-19 தடுப்பூசிகள் அழிக்கப்பட்டுள்ளன.
காலாவதியானதை அடுத்து அவை அழிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிப்ளி அஹ்மாட் (Datuk Seri Dr Dzulkifli Ahmad) தெரிவித்தார்.
இதனால் அரசாங்கத்துக்கு மொத்தமாக 18 கோடியே 50 லட்சம் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டது.
கோவிட்-19 தேசியத் தடுப்பூசித் திட்டம் 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-காம் தேதி தொடங்கியதில் இருந்து, கொள்முதல் வாயிலாகவே அல்லது நன்கொடையாகவோ அரசாங்கம் 8 கோடியே 45 லட்சம் தடுப்பூசிகளைப் பெற்றதாக அவர் சொன்னார்.
காலாவதியானதால் அழிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை எவ்வளவு, அதனால் ஏற்பட்ட இழப்பு எவ்வளவு என மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் Dr சுல்கிப்ளி அவ்விவரங்களை வழங்கினார்.
எனினும், இழப்பு ஏற்பட்டதைக் குறிப்பிடுவதால், தமக்கு முந்தைய சுகாதார அமைச்சர்கள் மீது தாம் தவறானக் கண்ணோட்டத்தைக் கொண்டு வருவதாக யாரும் அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது என அவர் தெளிவுப்படுத்தினார்.
அப்போது அதற்கான SOP நடைமுறைகள் எதுவும் இல்லை; தடுப்பூசியைப் பெறுவதற்கான போட்டியும் அச்சமயம் கடுமையாக இருந்தது.
எனவே, முடிந்த வரை அதிகளவு தடுப்பூசி கையிருப்பு இருப்பதை உறுதிச் செய்ய வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருந்ததை, தம்மால் புரிந்துக் கொள்ள முடிவதாக Dr சுல்கிப்ளி விளக்கினார்.