தஞ்சோங் மாலிம், ஜூலை 17 – மரபு கவிதைகள் இலக்கியத்தின் வேராகக் கருதப்படுகின்றன.
யாப்பு விதிகள், ஓசை நயங்கள், கவிதையின் சீர் சிதையாமல் வரையறுத்துக் கற்பனை ஆற்றலுடன் இயற்றப்படுவதே மரபு கவிதைகளாகும்.
அந்த இலக்கியப் படைப்புக்கு நீர் வார்த்து வாழ வைக்க உப்சி எனப்படும் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் வளர்தமிழ் மன்றம், மதியுரைஞர் இணைப் பேராசிரியர் முனைவர் மனோன்மணி தேவி அண்ணாமலை தலைமையில் ஒவ்வொரு ஆண்டும் நல்லார்க்கினியன் மரபு கவிதை போட்டியை நடத்தி வருகிறது.
அவ்வகையில், இவ்வருடம் மாணவர், இளையோர் மற்றும் பொது என 3 பிரிவுகளாக 6ஆவது முறையாக நடத்தப்பட்ட இப்போட்டியின் பரிசளிப்பு விழா வருகின்ற ஜூலை 27ஆம் திகதி உப்சி தஞ்சோங் மாலிம், பேராக்கில் நடைபெறவுள்ளது.
இந்த விழாவில், மலேசியாவில் தமிழ் இலக்கியங்களுக்கு உயிர் ஊட்டும் வகையில் தொடர்ந்து பல சிறந்த படைப்புகளை வழங்கிக் கொண்டிருக்கும் ஐந்து கவிஞர்களுக்குச் சிறப்புச் செய்யும் அங்கமும் இடம்பெறும் என நிகழ்ச்சியின் இயக்குநர் அஷ்வினி சுகுமாறன் தெரிவித்தார்.
Auditorium Utama, உப்சியில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ.எம் சரவணன் தொடக்கி வைப்பார்.
எனவே,பல்கலைக்கழக மாணவர்களையும், பேராசிரியர்களையும், மலேசியா கவிஞர்களையும் அழைத்து வெற்றிக்கு ஒரு விழாவாக மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ள இவ்விழாவிற்கு ஏற்பாட்டாளர்கள் பொதுமக்களை அன்புடன் வரவேற்கிறார்கள்.