ஜோகூர் பாரு, ஜூன்-9 – ஜோகூர், ஸ்தூலாங் சட்டமன்ற மக்கள் சேவை மையம் ஏற்பாட்டிலான குடியுரிமை விளக்கக் கூட்டம், அதிரடியாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
ஜூன் 30-ஆம் தேதி நடைபெறவிருந்த அந்நிகழ்வு சர்ச்சையாகி பொது மக்களின் கண்டனங்களைப் பெற்றதால், வேறு வழியின்றி ரத்துச் செய்யப்பட்டதாக அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் Andrew Chen Kah Eng கூறினார்.
பெற்றோர்களின் கவனக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் பிறப்புப் பத்திரம் அல்லது குடியுரிமை கிடைக்காமல் போகும் பிரச்னைகளை அலசி, தீர்வு காணவே அக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அது போன்ற பிரச்னையில் சிக்கியிருப்போர் எந்தெந்த பாரங்களைப் பூர்த்திச் செய்ய வேண்டும், எந்தெந்த அரசு அலுவலங்களை நாட வேண்டும் என்பன போன்ற தகவல்கள் அதில் மக்களுக்கு வழங்கப்பவிருந்தன.
ஆனால் நிகழ்வின் போஸ்டர் குறிப்பாக அதில் இடம் பெற்றிருந்த தலைப்பு வைரலாகி பொது மக்களிடையே தவறான புரிதலை உண்டாக்கி விட்டதாக Andrew சொன்னார்.
எனவே, நிலைமையை மேலும் மோசமாக்க வேண்டாம் எனக் கருதி அவ்விளக்கக் கூட்டம் ரத்துச் செய்யப்பட்டது என்றார் அவர்.
அந்நிகழ்வின் போஸ்டர் முன்னதாக வைரலாகி, ஜொகூரில் கள்ளக் குடியேறிகளுக்குக் குடியுரிமை வழங்கும் நிகழ்வே அதுவென கண்டனங்கள் குவிந்தன.
அந்நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்துமாறு நெட்டிசன்கள் அதிகாரத் தரப்பை வலியுறுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.