இஸ்கண்டார் புத்ரி, ஜூலை 29 – ஆன்லைனில் அறிமுகமான “காதலன்” ஆள்மாறாட்டம் செய்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்ததோடு நில்லாமல், அழகுசாதன முகவராக வேலை வாங்கி தருவதாக கூறிய அவனிடம், பெண் ஒருவர் ஆறு லட்சத்து 58 ஆயிரத்து 166 ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளார்.
எனினும், டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் சமூக ஊடகம் வாயிலாக அறிமுகமான அவனிடம் தாம் ஏமாந்து விட்டதை உணர்ந்து கொண்ட அந்த 38 வயது பெண், நேற்று அது குறித்து போலீஸ் புகார் செய்துள்ளார்.
இணைப்பு ஒன்றின் வாயிலாக, அழகு சாதண முகவராக வியாபாரம் செய்ய, அவன் அப்பெண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளான்.
அதனை நம்பி, கடந்த ஜூன் 14-ஆம் தேதி தொடங்கி, ஜூலை 12-ஆம் தேதி வரையில், அப்பெண் 30 வங்கி பணமாற்று நடவடிக்கைகள் வாயிலாக மொத்தம் ஆறு லட்சத்து 58 ஆயிரத்து 166 ரிங்கிட்டை, 11 வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு செலுத்தியதாக, இஸ்கண்டார் புத்ரி போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் எம்.குமரேசன் தெரிவித்தார்.
எனினும், அதன் பின்னர் அவ்வாடவனுக்கு வீடியோ அழைப்பு செய்த அப்பெண், வாட்ஸ்அப்பில் அவன் வைத்திருந்த புகைப்படம் மாறுபட்டிருப்பதை கண்டு, அவன் ஆள்மாறட்டம் செய்துள்ளதை அறிந்து போலீஸ் புகார் செய்துள்ளார்.
அந்த மோசடி சம்பவம் தொடர்பில், குற்றவியல் சட்டத்தின் 420-வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.