ஜொகூர் பாரு, மே-8 – ஜொகூர் பாருவில் hardware தளவாடக் கடை உரிமையாளர் ஒருவர், fixed deposit என பரவலாக அறியப்படும் நிரந்தர வைப்புத் தொகை திட்ட மோசடிக்கு ஆளாகி RM3.4 million ரிங்கிட்டைப் பறிகொடுத்துள்ளார்.
ஆறாண்டுகளாக அத்திட்டத்தில் பங்கெடுத்து வந்துள்ள போதும், இவ்வாண்டு தொடக்கத்தில் தான், தான் மோசடிக்கு ஆளானதை 62 வயது அந்நபர் உணர்ந்துள்ளார்.
இதையடுத்து நேற்று ஜொகூர் போலீஸ் தலைமையகத்தில் அவர் புகார் செய்ததை, மாநில போலீஸ் தலைவர் கமிஷ்னர் எம்.குமார் உறுதிபடுத்தினார்.
நல்ல இலாபம் பார்க்கலாம் எனக் கூறி, கோலாலம்பூரைச் சேர்ந்த வங்கியாளர் என அடையாளப்படுத்திக் கொண்ட பெண்ணொருவர், 2018-ஆம் ஆண்டு அம்முதியவருக்கு அந்த நிரந்தர வைப்புத் தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
அத்திட்டம் கவர்ச்சிகரமாக இருந்ததால் அதில் இணைய ஒப்புக் கொண்ட அவ்வாடவர், 2019 முதல் இவ்வாண்டு மார்ச் வரை 10 முறை காசோலைகள் வாயிலாக மொத்தம் RM3.4 million ரிங்கிட்டை அப்பெண்ணின் கைகளில் ஒப்படைத்திருக்கிறார்.
2020-ஆம் ஆண்டு வட்டிப் பணமாக 70 ஆயிரம் ரிங்கிட் கிடைத்ததால் அவருக்கு சந்தேகம் எதுவும் ஏற்படவில்லை; எனவே அவர் தொடர்ந்து கூடுதலாக பணம் போட்டு வந்துள்ளார்.
இவ்வாண்டு மேற்கொண்டு வட்டியை மீட்க அவர் முற்பட்ட போது, அப்பெண் பல்வேறு காரணங்களைக் கூறி இழுத்தடித்திருகிகிறார்.
சந்தேகத்தில் சம்பந்தப்பட்ட வாங்கியில் சென்று கேட்ட போது தான், தன் பெயரிலோ தனது நிறுவனத்தின் பெயரிலோ நிரந்தர வைப்புதொகை எதுவும் இல்லை என்பதை அவர் கண்ணடறிந்தார்.
இதுநாள் வரை அவர் கொடுத்த காசோலைகளும் வேறு யாரோ ஒருவரின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளன.
அச்சம்பவம் குற்றவியல் சட்டத்தின் 420-வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவதாகக் கூறிய கமிஷ்னர் குமார், முன் பின் தெரியாதவர்களை எளிதில் நம்பி ஏமாற வேண்டாம் என பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.