ஸ்ரீ ஆலாம், ஜூலை-11 – ஜோகூர், பாசீர் கூடாங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் பெற்றோரால் வீட்டுக்குக் வெளியே அஞ்சடியில் (corridor) தூங்கக் கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட 13 வயது பையன் மீட்கப்பட்டுள்ளான்.
ஜூலை 7-ஆம் தேதியிலிருந்து வீட்டை விட்டு ‘விரட்டப்பட்ட’ அப்பையன் நேற்று போலீசாரால் மீட்கப்பட்டதை, ஸ்ரீ ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடென்டண்ட் மொஹமட் சொஹாய்மி இஷாக் ( Superintendent Mohd Sohaimi Ishak) உறுதிபடுத்தினார்.
போலீசாரால் மீட்கப்படும் வரை, 4 நாட்களாக வீட்டு அஞ்சடியிலேயே தூங்க அவன் கட்டாயப்படுத்தப்பட்டது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, முறையே 54, 56 வயதுடைய அவனது பெற்றோர் வியாழக்கிழமை இரவு 11.30 மணி வாக்கில் கைதாகினர்.
அச்சிறுவனின் தந்தை ஏற்கனவே 2 குற்றப்பதிவுகளைக் கொண்டிருப்பதும் விசாரணையில் அம்பலமானது.
சித்ரவதை செய்தது, அலட்சியப்படுத்தியது, புறக்கணித்தது அல்லது உடல் ரீதியாகவோ மனரீதியாகவோ காயமடையும் அளவுக்கு இட்டுச் சென்றதற்காக 2001 சிறார் சட்டத்தின் கீழ் ஜூலை1 4 வரை அவர்கள் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அச்சிறுவன் அஞ்சடியில் தூங்கும் புகைப்படங்கள் Komuniti Taman Air Biru என்ற facebook பக்கத்தில் பதிவேற்றப்பட்டு முன்னதாக வைரலானது.