
ஜோகூர் பாரு, ஏப் 10 – வேலை வாய்ப்பு மோச கும்பலால் பாதிக்கப்பட்ட ஐவர் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த மோசடி கும்பலின் நடவடிக்கை அம்பலமானது. மேலும் இந்த நடவடிக்கையில் முக்கியமானவர்கள் என்று நம்பப்படும் மூன்று நபர்கள் ஜோகூரில் சிறப்பு போலீஸ் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர்.
அந்த கும்பலின் முக்கிய முகவராக செயல்பட்ட உள்நாட்டைச் சேர்ந்த
19 வயதுடைய நபர் ஜோகூர் பாரு மாவட்டத்தில் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ எம்.குமார் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ஜோகூர் பாரு மற்றும் பத்து பஹாட்டில் 18 மற்றும் 25 வயதுடைய மேலும் இரண்டு உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வேலை வாய்பு திட்டத்தில் சேர்வதற்காக பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் ஏமாற்றியதாக நம்பப்படுகிறது. அந்த கும்பலின் தொடர்பு நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கை தொலைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் குமார் தெரிவித்தார்.
தாய்லாந்தில் 8,000 ரிங்கிட் முதல் 15,000 ரிங்கிட் வரையிலான லாபகரமான சம்பளத்தில் வேலை வாய்ப்பு இருப்பதாக உறுதியளித்து, தனிநபர்களை கவர்ந்திழுக்கும் முறையைப் பயன்படுத்தி, அக்கும்பல் மியான்மரில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக குமார் கூறினார்.
அக்கும்பலின் பேச்சை நம்பி தாய்லாந்திற்கு சென்றதும் , பாதிக்கப்பட்டவர்கள் மியான்மரின் தொலைதூரப் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, அவர்களின் அனைத்து தனிப்பட்ட உடைமைளும் பறிமுதல் செய்யப்படுகின்றன.
அதன் பின்னர் அவர்களின் நடமாட்டங்களை மோசடிக் கும்பலின் உறுப்பினர்கள் கண்காணித்து வந்தனர்.
மார்ச் 12 ஆம்தேதியன்று பேங்காங்கில் உள்ள மலேசிய தூதரகம் மூலம், மியான்மரில் வேலை மோசடி கும்பலுடன் தொடர்புடைய மனித கடத்தலில் பாதிக்கப்பட்ட 25 பேரை உள்துறை அமைச்சு வெற்றிகரமாக மீட்டு மலேசியாவுக்கு அனுப்பியதாக குமார் கூறினார்.