ஜோகூர் பாரு, ஜூலை 30 – ஜோகூர், இஸ்கண்டார் புத்ரியிலுள்ள, ஈகோ காலேரியாவில் (Eco Galleria) , போன் ஓடோரி விழா (Bon Odori) நடைபெற்ற இடத்திலிருந்து, ஆறு வயது சிறுமி ஆல்பர்டைன் லியோ (Albertine Leo) கடத்தப்பட்டதற்கான காரணம், போலீஸ் விசாரணை நிறைவு பெறும் வரை வெளியிடப்படாது.
தற்போது நடைபெற்று வரும் விசாரணைக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஜோகூர் போலீஸ் தலைவர் கமிஸ்னர் எம்.குமார் தெரிவித்தார்.
சந்தேக நபரின் தடுப்பு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால், விசாரணை தொடர்பான மிக அண்மைய தகவல்கள் அவ்வப்போது வெளியிடப்படுமெனவும், குமார் சொன்னார்.
இவ்வேளையில், சுகாதார அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட சிறுமி காயம் எதுவும் இன்றி நலமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதையும், குமார் உறுதிப்படுத்தினார்.
அந்த கடத்தல் சம்பவம் தொடர்பில், இம்மாதம் 23-ஆம் தேதி, பத்தாங் காலியிலுள்ள, தங்கும் விடுதி ஒன்றில் கைதுச் செய்யப்பட்ட, சிறுமியுடன் இருந்த 31 வயது ஆடவனின் தடுப்புக் காவல் வரும் ஞாயிற்றுகிழமை வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதர நால்வர், போலீஸ் உத்தரவாததின் பேரில், கடந்த வெள்ளிக்கிழமை, விடுவிக்கப்பட்டனர்.
முன்னதாக, ஜூலை 20-ஆம் தேதி, இரவு மணி 8.30 வாக்கில், சிறுமி கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.