பாசீர் கூடாங், ஜூன் 20 – பள்ளி வேன் மோதி 5 வயது சிறுமி உயிரிழந்த துயரச் சம்பவம் பாசீர் கூடாங், ஜாலான் சூரியா, பண்டார் ஸ்ரீ அலாமில் ( Jalan Suria, Bandar Sri Alam ) உள்ள அச்சிறுமியின் வீட்டிற்கு முன்னர் நேற்று காலை மணி 11.35 அளவில் நிகழ்ந்தது. 50வயதுடைய அந்த வேன் ஓட்டுனரான பெண் ஒருவர் பாலர் பள்ளிக்கு சென்றுவந்த அந்த சிறுமியையும் அதன் ஆறு வயது சகோதரனையும் அவர்களது வீட்டிற்கு முன் இறக்கிவிட்டபோது இந்த விபத்து ஏற்பட்டது. அந்த சிறுமியின் சகோதரன் வேன் பின்னாலிருந்து அதனை கடந்து சென்றதை பார்த்தவுடன் வேன் ஓட்டுனர் வேனை எடுத்துள்ளார். அப்போது தனது சகோதரனை பின் தொடர்ந்து அச்சிறுமியும் வேன் முன் சென்றபோது அச்சிறுமியை வேன் மோதியுள்ளது. வேனிலிருந்து இறங்கிய அதன் ஓட்டுனர் இச்சம்பவத்தை கண்டு அச்சிறுமியின் தாயிடம் கூறியதோடு உடனடினயாக மாசாய்யிலுள்ள சுகாதார கிளினிக்கிற்கு சிகிச்சைக்காக அச்சிறுமியை கொண்டு சென்றுள்ளார்.
எனினும் கடுமையாக காயம் அடைந்த அச்சிறுமி சிகிச்சையின்போது மரணம் அடைந்ததாக ஸ்ரீ அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரின்டென்டன் முகமட் சொஹாய்மி இஷாக் ( Mohd Sohaimi Ishak ) தெரிவித்தார்.
1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் 41ஆவது விதி உட்பிரிவு (1) இன் கீழ் மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு கவனக்குறைவாக மற்றும் ஆபத்தாக வாகனம் ஓட்டியது தொடர்பில் இந்த விபத்து தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட அந்த வேன் ஓட்டுனர் விசாரணைக்கு உதவும் பொருட்டு கைது செய்யப்பட்டிருப்பதாக முகமட் சொஹாய்மி கூறினார்.