
கோலாலம்பூர், ஜூலை-29-பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு எதிராகப் பதிவு செய்த 150 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான அவதூறு வழக்கை மீண்டும் தொடர Tun Dr Mahathir Mohamadட்டின் உடல்நிலை ஒத்துழைக்குமா என்பது குறித்து வரும் வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்படவுள்ளது.
நீதித்துறை ஆணையர் Datuk Donald Joseph Franklin முன்னிலையில் இணையம் வாயிலாக வழக்கு நிர்வாக விசாரணை நடைபெறும் என Dr Mahathirடின் வழக்கறிஞர் Muhammad Rafique Rashid Ali தெரிவித்துள்ளார்.
Dr Mahathir தற்போது தேசிய இருதய சிகிச்சைக் கழகத்தின் கண்காணிப்பில் இருக்கிறார். விசாரணையை மீண்டும் தொடர அவரது தயார்நிலை மற்றும் உடல்நிலை குறித்து வெள்ளிக்கிழமையன்றுதான் தெரிவிக்க முடியும் என மருத்துவ நிபுணர்கள் கூறியிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
பிரதமராக இருந்த 22 ஆண்டு காலத்தில் இனவாதியாக இருந்ததாகவும், தமக்கும் குடும்பத்தினருக்கும் முறையற்ற வகையில் சொத்து சேர்த்ததாகவும் குற்றம் சாட்டி அன்வார் தமது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாக Dr Mahathir அந்த அவதூறு வழக்கில் குறிப்பிட்டிருந்தார்.
2023 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி ஷா ஆலாமில் உள்ள மெலாவதி அரங்கத்தில் நடைபெற்ற PKR கட்சியின் சிறப்புத் தேசிய மாநாட்டில் ஆற்றிய உரையில் அன்வார் அவ்வாறு தெரிவித்ததாக அவர் கூறியிருந்தார்.
அக்கூற்றுகளை வெளியிட்டதற்காக அன்வார் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோர வேண்டும். அதற்காக ஒரு சிறப்புச் செய்தியாளர் சந்திப்பை நடத்த வேண்டும். அதோடு 100 மில்லியன் ரிங்கிட் தண்டனைக்குரிய இழப்பீடாகவும், 50 மில்லியன் ரிங்கிட் பொது இழப்பீடாகவும் கொடுக்க வேண்டும் என Mahathir கோரியுள்ளார்.
வீட்டில் உடற்பயிற்சி செய்யும் போது கீழே விழுந்ததால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள Dr Mahathirருக்கு அவகாசம் அளிக்கும் வகையில், அவ்வழக்கு விசாரணை இவ்வாண்டு தொடக்கத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



