அலோர் ஸ்டார், ஏப்ரல் 24 – விரைவுப் பேருந்துகளில் கைத்தொலைபேசியில் டிக் டோக் பார்த்துக் கொண்டு ஓட்டிய முன்று பேருந்து ஓட்டுநர்களை சாலைப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.
ஷஹாப் பெர்டானா பேருந்து நிலையத்திலிருந்து ஈப்போ, பேராக் மற்றும் கோலாலம்பூர் ஆகிய இடங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் பயணிகள் போல் மாறுவேடமிட்ட ஜே.பி.ஜே அதிகாரிகள், சம்பந்தப்பட்ட அந்த மூன்று ஓட்டுநர்களை கைது செய்துள்ளனர் என கெடா சாலை போக்குவரத்துத் துறையின் துணை தலைவர் ஷாருல் அசார் மாட் டாலி தெரித்தார்.
ஹரி ராயா ஐடில்பித்ரி முன்னிட்டு இரகசியமாக மேற்கொண்ட அதிரடி சோதனைகளின் வழி, சம்பந்தப்பட்ட மூன்று விரைவு பேருந்து ஓட்டுநர்கள் கைத்தொலைபேசி பயன்படுத்தியதை வெற்றிகரமாகக் கண்டறிந்திருக்கின்றனர்.
ஓட்டுநர்களில் இருவர் டிக் டோக் நேரலையில் உலாவியது, மற்றொருவர் கிட்டத்தட்ட பேருந்து செலுத்தும் முழு வழியிலும் வீடியோ அழைப்புகளைச் செய்ததும் தெரியவந்திருக்கிறது.
இதனை தொடர்ந்து, தகவல் தொடர்பு சாதனத்தைப் பயன்படுத்திய குற்றத்திற்காக, சாலை போக்குவரத்து விதிகளின் கீழ், சம்பந்தப்பட்ட ஓட்டுநர்களுக்கு RM 150 ரிங்கிட் அபராதம் விதிக்கபட்டிருக்கிறது.
இதனிடையே, ஏப்ரல் 1 முதல் 20ஆம் திகதி வரை ஐடில்பித்ரி முன்னிட்டு மேற்கொண்ட நடவடிக்கையின் போது மொத்தம் 54,821 வாகனங்களை சோதனை மேற்கொண்டதில் 10,151 சம்மன்கள் வெளியிட்டதோடு, 432 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் நான்கு பேருந்து ஓட்டுநர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதும் சிறுநீர் பரிசோதனையின் வழி தெரியந்துள்ளது.