வாஷிங்டன், ஜூன் 28 – அமெரிக்கா, வாஷிங்டனில், உள்நாட்டு நேரப்படி வியாழக்கிழமை இரவு, டிரம்புடன் நடைபெற்ற விவாதம், 81 வயதான ஜோ பைடன் இன்னும் ஒரு தவணைக்கு அதிபராக பதவி வகிக்க முடியுமா? எனும் கேள்விகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் என, அவரது ஆதரவாளர்கள் நம்பி இருந்தனர்.
ஆனால், பைடனின் கரகரப்பான குரலும், குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்பை அவர் எதிர்கொண்ட முறையும், அந்த நம்பிக்கையை சிதறடித்து விட்டதாக கூறப்படுகிறது.
இவ்வாண்டு, நவம்பர் ஐந்தாம் தேதி நடைபெறவுள்ள, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட, 78 வயது டிரம்பும், பைடனும் உடல் ஆரோக்கியம் ரீதியாக தகுதியானவர்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
குறிப்பாக, பைடனின் உடல்நிலை குறித்த கவலையே மேலோங்கியுள்ளது.
விவாத மேடையில், சலிக் காரணமாக கரகரப்பான குரலில் பேசிய பைடன், சில இடங்களில் டிரம்புக்கு பதில் சொல்ல தடுமாறியதாகவும், பின்வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
டிரம்ப் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
எனினும், விவாதத்தின் தொடக்கத்தில், மருத்துவ காப்பீடு மற்றும் வரி சீர்திருத்தம் குறித்து பேசிய பைடன், திடீரென இடையிலேயே பேச்சை நிறுத்தியதோடு, தடுமாறினார்.
அதனால், அவர் என்ன பேசுகிறார் எனது எனக்கு புரியவில்லை. அவருக்கே புரிகிறதா என்பதும் கேள்விக்குறியே என டிரம்ப் கிண்டலாக கூறியது, பைடன் ஆதரவாளர்களை அதிர வைத்துள்ளது.