புத்ராஜெயா, ஜூன்-23, SKDS எனப்படும் மானிய விலையிலான டீசல் கட்டுப்பாட்டு முறையின் கீழ் கிடைக்கப்பெறும் முழுமைப்பெற்ற விண்ணப்பங்கள், இனி உடனுக்குடன் அங்கீகரிக்கப்படும் என உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு KPDN அறிவித்துள்ளது.
தரைப் போக்குவரத்து நிறுவனங்கள், தாங்கள் விரும்பும் எரிபொருள் நிறுவனங்களிடம் மானிய அட்டைகளுக்கு (fleet card) உடனடியாக விண்ணப்பிக்க அது வகைச் செய்யும் என அமைச்சர் அர்மிசான் (Armizan Mohd Ali) மொஹமட் அலி தெரிவித்தார்.
எனவே, SKDS முறையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள 33 வகை தரை போக்குவரத்து வாகனங்கள் அதற்கு உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்றார் அவர்.
டீசல் மானியத்தைப் பெறத் தகுதியான அந்த 33 வகை வாகனங்களில் பள்ளி மற்றும் விரைவுப் பேருந்துகள், பொது சரக்கு லாரிகள், பாட்டில்களில் பானங்களை ஏற்றிச் செல்லும் லாரிகள், குளிரூட்டப்பட்ட லாரிகள், ஜன்னல் வேன்கள் ஆகியவையும் அடங்கும்.
ஜூன் 30-க்கு முன் SKDS அனுமதியைப் பெறும் போக்குவரத்து நிறுவனங்கள், எரிபொருள் நிறுவனங்களிடமிருந்து fleet அட்டைகளைப் பெறும் வரை, தங்கள் ரசீதுகளை வாங்கியதற்கான சான்றாகப் பயன்படுத்தி, செலவினங்களைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் அர்மிசான் கூறினார்.
ஜூலை முதல் அவர்களுக்குப் பணம் திருப்பித் தரப்படும்.
அதற்கான விண்ணப்பம் மற்றும் பணம் திருப்பித் தரப்படும் முறையை நிதி அமைச்சு விரைவில் அறிவிக்கும் என்றார் அவர்.
இன்று காலை 8 மணி நிலவரப்படி, 75,541 நிறுவனங்களைச் சேர்ந்த 226,957 தரைப் போக்குவரத்து வாகனங்களுக்கு டீசல் மானியம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.