
ஆஸ்டின், மார்ச்-23-அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் வானில் திடீரென தீப்பந்து போல பாய்ந்த விண்கல், மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
மார்ச் 21-ஆம் தேதி ஹூஸ்டன் (Houstan) நகரில், பச்சை ஒளி, கருப்பு புகை, அதிரடி சத்தம் என வானில் நிகழ்ந்த ‘மாயஜால’ காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
அச்சம்பவத்தைப் பார்த்ததாகக் கூறி 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்ததை, அமெரிக்க விண்கல் சங்கம் உறுதிப்படுத்தியது.
ஒரு பட்டணத்தில், வீட்டின் கூரையை கிழித்துகொண்டு, கால்பந்து அளவிலான கருப்பு கல், படுக்கையறையில் விழுந்ததாக வந்த புகாரும் அவற்றிலடங்கும்.
அதிர்ஷ்டவசமாக, அப்போது யாரும் வீட்டில் இல்லை.
சுமார் ஒரு டன் எடை மற்றும் 3 அடி சுற்றளவு கொண்ட இந்த விண்கல் 35,000 மைல் வேகத்தில் பாய்ந்து, 49 மைல் உயரத்தில் வளிமண்டலத்தில் நுழைந்து, 29 மைல் உயரத்தில் வெடித்துச் சிதறியதாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கூறியது.
காணக்கிடைக்காத இந்த அரிய விண்கல் சம்பவம், டெக்சஸ் மக்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்துள்ளது.
சில நாட்களுக்கு முன் Ohio மாநிலத்தில் ஏரிக்கு மேலேயும் இதேபோன்ற வான் அதிசயம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.



