கோலாலம்பூர், ஏப்ரல் 24 – கேப்பிடல் ஏ பெர்ஹாட்டின் தலைமை செயல் அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டாஸ் கடந்த புதன்கிழமையன்று, தனது ஓய்வூதியத் திட்டத்தை ஒதுக்கி வைக்க ஒப்புக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
பட்ஜெட் விமானக் குழுவான ஏர் ஏசியாவின் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகத் தொடர தனது புதிய ஐந்தாண்டு கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக, ஓய்வு பெற விரும்புவதாக ஜனவரி மாதத்தில் அறிவித்த பெர்னாண்டஸ், தற்போது நிறுவனத்தில் தொடர்ந்து இருக்குமாறு கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து தனது ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
2001ஆம் ஆண்டு முதல் ஏர் ஏசியா நிறுவனத்திற்கு தலைமை தாங்கிய பெர்னாண்டாஸ், அவரது வணிகப் பங்குதாரரான Kamarudin Meranun-டன் இணைந்து ஏர் ஏசியாவை மலேசிய அரசாங்கத்திடம் இருந்து RM 1 ரிங்கிட் அதாவது அந்த நேரத்தில் சுமார் US$ 0.30 அமெரிக்க டாலர்களுக்குக் கைப்பற்றினார்.
இரண்டு விமானங்களுடன் தொடங்கிய ஏர் ஏசியா, தற்போது தென்கிழக்கு ஆசியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு சேவை செய்யும் சுமார் 200 விமானங்களைக் கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.