
கோலாலம்பூர், அக்டோபர்-14,
அடுத்த வாரம் மலேசியா 47-வது ஆசியான் உச்சநிலை மாநாட்டை நடத்துவதால், மாநகர மையமே முழுமையாக முடக்கம் காண்கிறது.
இதில் அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து அக்டோபர் 23 முதல் அக்டோபர் 28 வரை போலீஸ் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமென, வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான் கூறினார்.
அக்டோபர் 23 முதல் நாடு முழுவதிலுமிருந்து, குறிப்பாக அண்டை மாநிலங்களிலிருந்து கோலாலம்பூருக்கு சுமார் 16,000 போலீஸ்காரர்கள் பணியமர்த்தப்படுவர்; இதனால் போக்குவரத்தை எளிதாக்க முடியும் என்றார் அவர்.
கோலாலம்பூர் நகர மையம் முழுமையாக முடக்கப்படும் என்பதால் பாதுகாப்பு விஷயத்தில் போலீஸ் எந்த சமரசமும் செய்யாது என அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
அக்டோபர் 26 ஆம் தேதி உச்சநிலை மாநாடு தொடங்குகிறது.
இதில், பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் பிற உலகத் தலைவர்கள் ஆசியானுடன் கலந்துரையாடல் பங்காளியாக பங்கேற்பர்.
ஆசியான் மாநாட்டை முன்னிட்டு கோலாலாம்பூரில் சுமார் 70 பள்ளிகள் இயங்கலை வகுப்புகளுக்கு மாறும்; மாநகர மையத்திலிருந்து 25 கிலோ மீட்டர் சுற்றளவில் பணிபுரியும் அரசு ஊழியர்களும் வீட்டிலிருந்து வேலை செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது