நியூயார்க், ஏப்ரல் 16 – ட்விட்டர் என முன்பு அழைக்கப்பட்ட சமூக ஊடக தளமான X, இனி தனது புதிய பயனர்களுக்கு “கட்டணத்தை” அறிமுகப்படுத்தவுள்ளது.
உள்ளடக்கத்தை பதிவேற்றம் செய்வது, லைக் இடுவது, பதிலளிப்பது மற்றும் புக்மார்க் செய்தல் போன்ற செயல்பாடுகளை அந்த கட்டணம் உள்ளடக்கி இருக்குமென, அதன் தலைமை செயல்முறை அதிகாரி எலோன் மஸ்க் கூறியுள்ளார்.
X புதுப்பிப்புகளுக்காக நன்கு அறியப்பட்ட மூலமான X டெய்லி நியூஸ், அதனை உறுதிப்படுத்தியுள்ளது.
அதனால், இனி X சமூக ஊடகத்தில் இணைய விரும்பும் புதிய பயனர்களுக்கு, வருடாந்திர அடிப்படையில் அந்த கட்டணம் விதிக்கப்படும் என கூறப்படுகிறது.
X சமூக ஊடகத்தில் அதிகளவில் காணப்படும், பூட் எனப்படும் தானியங்கி மோசடி தகவல்களை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு நடவடிக்கையாக அந்த கட்டணம் விதிக்கப்படுவதாக, மஸ்க் தற்காத்து பேசியுள்ளார்.
இதற்கு முன், நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் பயனர்களுக்கு அந்த கட்டணம் விதித்து சோதனை செய்யப்பட்ட வேளை : தற்போது அது அனைத்து புதிய பயனர்களுக்கும் விரிவுப்படுத்தப்படுகிறது.
ஸ்பேம் அல்லது மோசடிகளை குறைப்பதற்கும், பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் ஏதுவாக அந்த கட்டணம் விதிக்கப்பட்டாலும், அதன் செயல்திறன் குறித்து கேள்வி எழுந்துள்ளது.
அதோடு, இலவச மாற்று சமூக ஊடகங்கள் இருக்கும் போது, அந்த கூடுதல் கட்டணத்தால் சாதாரண பயனர்கள் ஏமாற்றம் அடையக் கூடுமெனும் கருத்தும் முன் வைக்கப்பட்டுள்ளது.
அந்த கட்டண முறை அமலுக்கு வந்தால், புதிய பயனர்களுக்கு, ஒரு அமெரிக்க டாலர் அல்லது நான்கு ரிங்கிட் 76 சென் கட்டணமாக விதிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.