தங்காக் சாலையில் எருமை மோதிய விபத்தில் 2 பெண்கள் பரிதாப பலி

தங்காக், ஜனவரி-5,
ஜோகூர், தங்காக்கில் எருமையை மோதியதால் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
சனிக்கிழமை இரவு 8.15 மணியளவில், ஜாலான் கெபுன் பாரு–புக்கிட் செரம்பாங் சாலையின் 33-ஆவது கிலோ மீட்டரில் விபத்து ஏற்பட்டது.
Mitsubishi Triton 4 சக்கர வாகனம், திடீரென சாலையை கடந்து சென்ற எருமையை மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த Honda City காரை நேருக்கு நேர் மோதியது.
இதில், Honda City-யில் முன் பக்க பயணிகள் இருக்கையில் அமர்ந்திருந்த 74 வயது மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த 42 வயது ஓட்டுநர் பின்னர் தங்காக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது உயிரிழந்தார்.
Honda City-யில் இருந்த மற்ற 2 பயணிகளும், மோதிய 4WD வாகன ஓட்டுநரும் காயமடைந்து சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.



