பெட்டாலிங் ஜெயா, ஜூலை 5 – மேற்கத்திய நாடுகளில் இருந்து தருவிக்கப்பட்ட சுவை பானத்தை, 89 ரிங்கிட் செலுத்தி தனது பிள்ளைக்கு வாங்கி தந்த பெண் ஒருவரின் செயல், இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தானியங்கி இயந்திரத்திலிருந்து அவர்கள் அப்பானத்தை வாங்கியதாக, @mhmmdhsm எனும் X சமூக ஊடக கணக்கில் பதிவிடப்பட்டுள்ள காணொளி வாயிலாக தெரிய வந்துள்ளது.
அந்த பானத்தை தொடர்ந்து, 55 ரிங்கிட் செலுத்தி அப்பெண் சாக்லெட் ஒன்றையும் வாங்கியுள்ளார்.
ஒன்று வாங்கினால், ஒன்று இலவசம் என்ற அடிப்படையில் அந்த பானம் வாங்கப்பட்டாலும், இறுதியில் கூடுதல் பண செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது தொடர்பில், அப்பெண் அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும், அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த பதிவுக்கு இணையவாசிகள் எதிர்மறையான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
“அந்த பானத்தை அதிக விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு, அதில் அப்படி என்ன சிறப்பு உள்ளது?” என ஒருவர் கேள்வி எழுப்பியுள்ள வேளை ;
“அதிக விலை கொடுத்து வாங்கி, அதிக சீனியை உட்கொள்ள வேண்டிய அவசியம் என்ன வந்தது? அந்த பானம் சிறுவர்களுக்கு ஏற்றது அல்ல” என மற்றொருவர் சாடியுள்ளார்.