
கோலாலாம்பூர், ஏப்ரல்-22-லங்காவியில் இந்து மதச் சின்னங்களில் ஒன்றான திரிசூலத்தை மிதித்து அவமதித்ததாகக் கூறப்படும் சமூக ஆர்வலர் தமிம் டாஹ்ரி (Tamim Dahri) மீது இதுவரை ஏன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மார்ச் 10-ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவம், நாட்டின் இன மற்றும் மத நல்லிணக்கத்திற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், விசாரணைக்கு பயந்து தலைமறைவாகி, தற்போது வெளிநாட்டில் இருந்துகொண்டு அரச மலேசியப் போலீஸ் படையை தமிம் கிண்டல் செய்து வரும் நிலையில், அவரை நாடு கடத்த எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ராயர் அதிருப்தி தெரிவித்தார்.
பஹாங்கில் புனித அல் குர் ஆன் நூலை அவமதித்த மாணவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய ராயர், தமிம் விவகாரத்தில் மட்டும் ஏன் காலதாமதம் என வினவினார்.
இந்தத் தாமதம் பொது மக்கள் மத்தியில் தேவையற்ற யூகங்களுக்கும் கோபத்திற்கும் வழிவகுக்கும் என அவர் எச்சரித்தார்.
“சட்டம் அனைவருக்கும் சமமானது, யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல” என்று குறிப்பிட்ட ராயர், தமிம் தஹ்ரியை உடனடியாகக் கைதுச் செய்து லங்காவி நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
இது குறித்து உள்துறை அமைச்சரும் தேசியப் போலீஸ் படைத் தலைவரும் வெறும் ஒப்புக்குக் அல்லாமல், மிகத் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சமரசமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே தமது கோரிக்கை என அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



