கோலாலம்பூர், அக்டோபர் 11 – நம் சமுதாயப் பிள்ளைகள் வழிதவறாமல் நன்னெறி மிக்க குடிமக்களாக உருவாக்க, பக்தி மார்க்கமும் இறை நம்பிக்கையும் மிக அவசியமாகும்.
அதன் அடிப்படையில், நவராத்திரி விழாவை முன்னிட்டு, தமிழ்ப்பள்ளி மாணவர்களிடம் இறை நம்பிக்கையை வளர்ப்பதற்காக வழிபாட்டு நிகழ்ச்சிகளைப் பள்ளிகள் நடத்தி வருகின்றன.
இந்த வழிபாட்டு நிகழ்ச்சிகளில், எந்தத் தவறும் இல்லை என்று ம.இ.கா. தேசிய ஊடகப் பிரிவுத் தலைவர் எல்.சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்திற்கும் அதன் தலைவருக்கும் ஆற்ற வேண்டிய சமூக சீர்திருத்தப் பணிகளும், மூடநம்பிக்கை தொடர்பாக ஆற்ற வேண்டிய கடமைகளும் அதிகமாக இருக்கிறது.
இதில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, தமிழ்ப்பள்ளி மாணவர்களிடம் இறைமறுப்பு சிந்தனையை ஏற்படுத்த முயல்வது சரியான நடவடிக்கை அல்ல என்றும் ம.இ.கா. மத்திய செயலவை உறுப்பினருமான சிவசுப்பிரமணியன் கூறியுள்ளார்.
மக்களிடையே நிலவும் ஒருமைப்பாட்டு உணர்வு மேலும் வலுப்பெறவும், நல்லிணக்கம் தழைக்கவும் உருவாக்கப்பட்ட ‘ருக்குன் நெகாரா’ ஐங்கோட்பாட்டின் முதல் கோட்பாடே, இறைவன்மீது நம்பிக்கை வைத்தல் என்பதை அவர் தமதறிக்கையில் நினைவுறுத்தியிருக்கிறார்.