
பெட்டாலிங் ஜெயா, மே-11-நோபல் பரிசு பெற்ற உலகப் புகழ்பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் 165-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மலேசிய பெங்காலி சங்கம் (MBA) ஏற்பாடு செய்திருந்த “தாகூர் விழா 2026” பெட்டாலிங் ஜெயாவில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
மெனாரா BAC-ல் நடைபெற்ற இந்த விழாவில், தாகூரின் கொள்ளுப் பேரன் பேராசிரியர் Dr சரனிந்த்ரநாத் தாகூர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
“தாகூரின் மனிதநேயம்” என்ற தலைப்பில் உரையாற்றிய அவர், தாகூரின் சிந்தனைகள் இன்றைய நவீன உலகுக்கு எவ்வளவு அவசியமானவை என்பதை எடுத்துரைத்தார்.
இந்த விழாவின் முக்கிய அங்கமாக, 1927-ஆம் ஆண்டு தாகூர் மலாயா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கு மேற்கொண்ட வரலாற்றுப் பயணம் குறித்த அரிய புகைப்படக் கண்காட்சி பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது.
தாகூரின் இசை, நாடகம் மற்றும் கவிதை வாசிப்பு போன்ற கலைநிகழ்ச்சிகள் பெங்காலி கலாச்சாரத்தின் பெருமையை மலேசிய மண்ணில் பறைசாற்றின.
நிகழ்ச்சியில் பேசிய BAC கல்வி நிறுவனத்தின் இணை நிறுவனர் ராஜா சிங்கம், தாகூரின் கல்வி மற்றும் சமூக ஒற்றுமை குறித்த பார்வைகள் இன்றும் வழிகாட்டியாகத் திகழ்வதாகவும், இத்தகைய விழாக்கள் இளைய தலைமுறைக்கு உத்வேகம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.
தாகூரின் சிறப்புகள் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டார்.
பெங்காலி கலை மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் மலேசிய பெங்காலி சங்கம் ஆற்றிவரும் 50 ஆண்டு காலப் பணியை இவ்விழா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.



