கோலாலம்பூர், ஏப் 15 – மலேசியா தனது தாதியர்களை வெளிநாட்டு சலுகைகளால் இழக்கிறது என்பதால் அவர்களின் சமூக நலனில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என MMA எனப்படும் மலேசிய மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் Azizan Abdul Aziz கேட்டுக்கொண்டிருக்கிறார். கோவிட் 19 தொற்று தொடங்கியது முதல் கடந்த நான்கு ஆண்டு காலமாக அரசாங்க தாதியர்கள் வெளிநாடுகள் வழங்கிவரும் சலுகைகளால் கவரப்பட்டு அவர்கள் அங்கு சென்றுவிடுவதாக அவர் கூறினார்.
கூடுதல் சம்பளத்திற்காக பலர் சுகாதார அமைச்சின் வேலையிலிருந்து விலகி விட்டனர். அண்டை நாடான சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு ஆசியாவிலுள்ள நாடுகள் சிறந்த சம்பளம் மற்றும் இதர சலுகைகளை வழங்குதால் தாதியர்களில் பலர் தங்களது பணியிலிருந்து விலகியிருப்பதாக டாக்டர் Azizan தெரிவித்தார். பலர் சிங்கப்பூருக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் மற்றும் மேற்காசியாவுக்கும் வேலைக்காக சென்றுவிட்டனர். U29 கிரேட்டைச் சேர்ந்த புதிய தாதியர்களுக்கான மாதந்திர தொடக்க சம்பளம் 1,800 ரிங்கிட்டாகும். இந்த தொகையைவிட ஐந்து மடங்கு கூடுதலான சம்பளம் சிங்கப்பூரில் வழங்கப்படுகிறது. பொது சுகாதார நலனில் வழங்கப்படும் குறைந்த சம்பளம்தான் தாதியர்களில் பலர் அரசாங்க சேவையிலிருந்து விலகி வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முக்கிய காரணம் என டாக்டர் Azizan சுட்டிக்காட்டினார்.