பேங்கோக், மே 24 – தாய்லாந்தில், கஞ்சாவை “பொழுதுப்போக்கு” நோக்கத்திற்காக பயன்படுத்துவது, புதிய விதிமுறைகளின் கீழ் தடைசெய்யப்படவுள்ளது.
அதே சமயம், கஞ்சாவை சாகுபடி செய்யவும், ஏற்றுமதி செய்யவும், ஆராய்ச்சி மற்றும் மருத்துவப் பயன்பாட்டிற்காக வைத்திருக்கவும் இனி சிறப்பு உரிமத்தை பெற்றிருக்க வேண்டும்.
கஞ்சாவை மீண்டும் போதைப் பொருளாக வகைப்படுத்த தாய்லாந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, நேற்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் சோம்சக் தெப்சுடின் தெரிவித்திருந்தார்.
அதனால், மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக அதனை பயிரிட்டு பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே இனி அனுமதி வழங்கப்படும் என சோம்சக் கூறியுள்ளார்.
எனினும், அந்த உரிமத்தை பெறுவதற்கான நிபந்தனைகள் குறித்து இன்னமும் ஆராயப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு சுமையை ஏற்படுத்தாதவாறும், அவர்கள் அந்த புதிய சூழலுக்கு தங்களை பழக்கப்படுத்திக் கொள்ளவும் ஏதுவாக கால அவகாசம் வழங்கப்படுமென சோம்சக் சொன்னார்.
ஈராண்டுகளுக்கு முன், தேசிய போதைப் பொருள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்கியது தாய்லாந்து. அதன் வாயிலாக, அதனை பொழுது போக்கு நோக்கத்திற்காக மக்கள் பயிரிடவும், பயன்படுத்தவும், விற்கவும் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.