தாவாவ், ஜூன் 20 – சபா , தாவாவ், பாசீர் பூத்தேவில் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சின் அதிகாரிகள் கிடங்கு ஒன்றில் வைக்கப்பட்டிருந்த உதவித் தொகை பெற்ற 4,000 லிட்டர் டீசல் எண்ணெயை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையின்போது அந்த கிடங்கின் பாதுகாவலரான 31 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதோடு 104,500 ரிங்கிட் மதிப்புள்ள டீசல் எண்ணெய் பறிமுல் செய்யப்பட்டதாக உள்நாட்டு வாணிகம் மற்றும் வாழ்கை செலவினத்துறையின் சபா இயக்குனர் ஜோர்ஜி அபாஸ்
( Georgie Abas ) தெரிவித்தார்.
பிற்பகல் மணி 2.20 அளவில் மேற்கொள்ளப்பட்ட அந்த சோதனையின்போது அங்கிருந்த 18 தோம்புகளில் 2,000 லிட்டர் டீசல் இருந்ததோடு டிரேலர் டாங்கியில் மேலும் 2,000 லிட்டர் டீசல் இருந்ததையும் அதிகாரிகள் கண்டுப் பிடித்தனர். கடந்த ஒரு வார காலமாக அதிகாரிகள் திரட்டிய உளவு தகவல் அடிப்படையில் அந்த கிடங்கில் சோதனை நடத்தப்பட்டதாக ஜோர்ஜி அபாஸ் கூறினார்.