
கோலாலம்பூர், ஆகஸ்ட் 6 – திட்டமிட்டு அல்லது குறிப்பிட்ட தரப்பினரின் ஏற்பாட்டில் KLIA விமன நிலையத்தின் முதலாவது முனையம் வாயிலாக மலேசியாவிற்குள் நுழைய முயன்ற 26 வங்காளதேச பிரஜைகள் நேற்று வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டனர்.
உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், அந்தக் குழு Dhaka விலிருந்து இரண்டு விமானங்களைப் பயன்படுத்தியதாகவும், அவர்களின் நுழைவுப் பாதை சில தரப்பினரின் உதவியுடன் திட்டமிடப்பட்டதாகவும் நம்பப்படுகிறது என மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனமான AKPS வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
KLIA விமான நிலையத்தின் முதலாவது முனையத்தின் அனைத்துலக வருகை வாயிலில் வந்தடைந்த அவர்கள் அனைவரும் விமானத்திலிருந்து இறங்கியவுடன் AKPS கண்காணிப்புக் குழுவால் தடுத்து நிறுத்தப்பட்டு, மேலும் பரிசோதனை நடவடிக்கைக்காக உடனடியாக AKPS KLIA1 செயல்பாட்டு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மலேசியாவிற்குள் நுழைவதற்கான தேவைகளைப் அவர்கள் பூர்த்தி செய்யவில்லை என்பதோடு , சந்தேகத்திற்குரிய காரணங்களை பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைய முயன்றனர் என்றும் கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அடுத்த விமானத்தில் அவர்கள் அனைவரையும் அவர்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவுகளை பிறப்பித்து AKPS விரைவான மற்றும் உறுதியான நடவடிக்கையை எடுத்தது.