திரவ நிக்கோட்டினை விஷப் பட்டியலிலிருந்து நீக்கியது ‘ஏற்புடைய செயல் அல்ல’; அரசுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்

கோலாலாம்பூர், மே-16,
மின்னியல் சிகரெட் மற்றும் வேப்பில் (Vape) பயன்படுத்தப்படும் திரவ நிக்கோட்டினை (liquid nicotine), 1952-ஆம் ஆண்டு விஷப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்கிய அரசாங்கத்தின் முந்தைய முடிவு “சற்றும் ஏற்புடையதல்ல” என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
3 பொது சுகாதார அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அலிசா சுலைமான், நிக்கோட்டின் மீதான வரி விதிப்பு மற்றும் பொருளாதார இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இந்த விலக்கு அளிக்கப்பட்டதாகக் சுட்டிக்காட்டினார்.
மலேசிய புகையிலை கட்டுப்பாட்டு வாரியம் – MKTM, Malaysian Green Lung Association -MGLA, Voice of Children – VOC ஆகியவையே அம்மூன்று அரசு சாரா அமைப்புகளாகும்.
இது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்று தெரிந்தும், 2024-ஆம் ஆண்டு பொது சுகாதார புகைபிடித்தல் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டம் அமுலுக்கு வரும் வரை, சந்தையில் ஒரு சட்ட ஓட்டையை அரசாங்கம் உருவாக்கியுள்ளது என நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
மேலும், விஷப் பொருட்கள் வாரியத்தின் ஆலோசனையை அரசாங்கம் வெறும் ஒரு சடங்காக மட்டுமே பயன்படுத்தியதாகவும், வாரியம் ஒருமனதாக இந்த முடிவை எதிர்த்த போதிலும், அப்போதைய சுகாதார அமைச்சர் தன்னிச்சையாகச் செயல்பட்டதாகவும் நீதிமன்றம் சாடியுள்ளது.



