Latestமலேசியா

சுக்மா 2026: தேக்குவாண்டோவில் அசத்திய 19 வயது காவியிஷா; கெடாவுக்கு வெண்கலம்

ஷா ஆலாம், ஆகஸ்ட்-16-சிலாங்கூர் சுக்மா (SUKMA) விளையாட்டுப் போட்டியில், தேக்குவாண்டோ பிரிவில் 19 வயது இளம் வீராங்கனை காவியிஷா விஜயகுமார் வெண்கலப் பதக்கம் வென்று புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

​ஷா ஆலம், IDCC மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 46 கிலோவுக்கு உட்பட்ட மகளிர் ‘Fin Weight’ பிரிவில், கெடா மாநிலத்தைப் பிரதிநிதித்து அவர் இந்தப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

​சிலாங்கூர், கிள்ளானில் பிறந்து வளர்ந்த காவியிஷாவின் திறமையை அடையாளம் கண்ட கெடா மாநில விளையாட்டு மன்றம், பயிற்சியாளர் கபிலனின் வழிகாட்டலில் அவரை சுக்மா போட்டிக்காகத் தேர்வுச் செய்தது.

​தனது ஏழாவது வயதில் சுய பாதுகாப்புக்காக தேக்குவாண்டோ பயிலத் தொடங்கிய காவியிஷா, மாவட்ட மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பல்வேறு வெற்றிகளைக் குவித்துள்ளார்.

இவர் கடந்தாண்டு சீனாவில் நடைபெற்ற Grandslam Youth போட்டியில் தங்கப் பதக்கமும், 2026 தேசிய Kyurogi போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

​விளையாட்டுத் துறையில் சாதனை படைத்து வரும் அதே வேளையில், காவியிஷா தற்போது கிள்ளான், ஸ்ரீ இஸ்தானா படிவம் 6 கல்லூரியில் அறிவியல் பிரிவில் STPM கல்வியைத் தொடர்ந்து வருகிறார்.

தனது முதல் சுக்மா போட்டியிலேயே பதக்கம் வென்ற காவியிஷாவுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக, சமூக ஊடகங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இதனிடையே இந்த சிலாங்கூர் சுக்மா போட்டி நேற்றிரவு அதிகாரப்பூர்வமாகத் தொடக்க விழா கண்டது.

Dataran Kemerdekaan ஷா ஆலாமில் சிலாங்கூர் பட்டத்து இளவரசர் Raja Muda Tengku Amir Shah Sultan Sharafuddin Idris Shah அவர்கள் இதனைத் தொடக்கி வைத்தார்.

14 மாநிலங்கள் மற்றும் சிறப்பு அழைப்புக் குழுவான புருணை ஆகியவற்றைச் சேர்ந்த 5,000 போட்டியாளர்கள் 37 விளையாட்டுப் பிரிவுகளில் இம்முறை களமிறங்குகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!