சில நாட்களுக்கு முன்பு, தேசிய மகளிர் பேட்மிண்டன் இரட்டையர் ஜோடி விளையாட்டாளரான M.தீனா, பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெறும் வாய்பை இழந்ததைத் தொடர்ந்து தனது சக ஆட்டக்காரார் பியர்லி தானுக்காக நெகிழ்ச்சியை தெரிவிக்கும் வகையில் ஒரு பதிவை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.
அதில், அவர்கள் கடந்து வந்த பாதை, இந்த ஒலிம்பிக் போட்டிக்கான அவர்கள் சந்தித்த சவால்கள், ஒருவருக்கு ஒருவர் பக்கபலமாக நின்ற தருணம் என தீனா தன் சகாவைப்பற்றி அந்த பதிவில் கூறியிருந்தார்.
இந்நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில், இப்போது தீனாவுக்காக பியர்லி தான், தனது இதயப் பூர்வமான வார்த்தைகளையும் தனது அன்பையும் மனதைக் கவரும் வகையில் இன்ஸ்டாகிராம்மில் பதிவிட்டுள்ளார்.
ஆரம்பத்திலிருந்தே நாங்கள் தோழிகளாக இல்லாவிட்டாலும், ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி இவ்வளவு தூரம் கடந்து வந்துள்ளோம். சில ஆண்டுகள் இணைந்து விளையாடியதில் எங்களிடையே சொந்த தவறான புரிதல்களும் போராட்டங்களும் இருந்தன. ஆனால் இந்த தாழ்வுகள், விடாமுயற்சி மற்றும் கூட்டாண்மையின் உண்மையான அர்த்தத்தை எனக்குக் காட்டியுள்ளார்.
நீங்கள் இல்லாமல், ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும் என்ற எனது கனவு ஒருபோதும் நிறைவேறாது. ஒலிம்பிக்கிற்கு முந்தைய சில வாரங்கள் எங்களுக்கு சவாலான தருணமாக இருந்தன. ஆனால் நாங்கள் அதைக் கடந்து வந்தோம்.
இப்படி பியர்லி தான் தனது இதயப்பூர்வமான நன்றியை தெரிவிக்கும் வகையில் வெளியிட்ட பதிவு வலைத்தளவாசிகளை பெரிதும் கவர்ந்துள்ளது.
ஒலிம்பிக் பேட்மிண்டன் வரலாற்றில் அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதிபெற்ற முதல் மலேசிய மகளிர் ஜோடி என்ற பெருமையும் அவ்விருவரும் ஏற்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.