
கோலாலம்பூர், அக்டோபர் 18 – தீபாவளியை முன்னிட்டு, இந்தியச் சிறு வணிகர்களின் வியாபார வளர்ச்சிக்கு உதவும் வகையில், “BERKAT Deepavali” சிறப்புக் கடனுதவித் திட்டத்தை தெக்குன் நேஷனல் வழங்குகிறது.
தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் (KUSKOP) கீழ் செயல்படும் தெக்குன் நேஷனல், இத்திட்டத்திற்காக 30 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது. தகுதியுள்ள வணிகர்கள் அதிகபட்சமாக 30,000 ரிங்கிட் வரை கடனுதவி பெறலாம்.
ஆண்டுக்கு 3 விழுக்காட்டு இலாப விகிதத்துடன் வழங்கப்படும் இந்தக் கடனுதவியைத் திருப்பிச் செலுத்த, 12 மாதங்கள் வரை அவகாசம் வழங்கப்படுகிறது.
மலேசியக் குடிமக்களான, 18 முதல் 65 வயதுக்குட்பட்ட இந்தியச் சிறு வணிகர்கள் மற்றும் சிறு கடைக்காரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். உணவு, பானங்கள், ஆடைகள் மற்றும் தீபாவளிக் கொண்டாட்டத்திற்கான பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோருக்கு இத்திட்டம் வாய்ப்பளிக்கிறது.
விண்ணப்பதாரர்கள் அடையாள அட்டை நகல், ஊராட்சி மன்ற உரிமம் அல்லது SSM பதிவு அல்லது தீபாவளிச் சந்தைக்கான அனுமதிப் பத்திரம் ஆகியவற்றுடன், கடந்த மூன்று மாத வங்கி அறிக்கை மற்றும் வியாபார நடவடிக்கைகளைக் காட்டும் புகைப்படங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள் நவம்பர் 8, 2026 ஆகும். விண்ணங்களுக்கான முடிவுகளும் ஓரிரு நாளில் தெரிவிக்கப்பட்டுவிடும்.
இந்திய சிறு வணிகர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு தெக்குன் நேஷனலின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை அணுகலாம் அல்லது விளம்பரப் பதாகையில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து விண்ணப்பிக்கலாம்.



