
கோலாலம்பூர், அக்டோபர்-18 – மக்களிடையே வரி விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், 2027 பட்ஜெட் குறித்த தகவல்களைக் கொண்டு சேர்ப்பதிலும் ஊடகங்களின் பங்களிப்பை உள்நாட்டு வருவாய் வாரியமான LHDN பாராட்டியுள்ளது.
கூச்சிங்கில் நடைபெற்ற சரவாக் மாநில ஊடகப் பாராட்டு விழாவில் பேசிய அதன் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ Dr Abu Tariq Jamaluddin, துல்லியமான வரித் தகவல்களை வழங்குவதில் ஊடகங்களுக்கும் துறைக்கும் இடையிலான உறவு மிக முக்கியம் என்றார்.
புதியத் திட்டங்களின் நோக்கங்களையும், வரி செலுத்துவோரின் கடமைகளையும் பொது மக்கள் புரிந்துகொள்ள இது உதவுகிறது.
மேலும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற தேசிய வரிப் பயிலரங்கம் மற்றும் ‘Lapor Sukarela, Tanggungjawab Bersama’ எனும் HASiL மாதக் கொண்டாட்டம் உள்ளிட்ட கல்விசார் முன்னெடுப்புகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதோடு, புவியியல் மற்றும் கலாச்சார சவால்களைக் கடந்து, தொலைதூரப் பகுதியில் வாழும் சமூகங்களுக்கும் தகவல்களைக் கொண்டு சேர்க்கும் சரவாக் ஊடகங்களின் பணிக்கு அவர் மனமார்ந்த நன்றி தெரிவித்தார்.
வரி செலுத்தும் கலாச்சாரத்தை மேம்படுத்தும் நோக்கில், இந்தத் தொழில்முறை ஒத்துழைப்பு தொடரும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.



