கோலாலம்பூர், மே 21 – நாட்டின் பாதுகாப்பை எப்போதும் உறுதிப்படுத்துவதற்காக தீவிரவாதிகள் மற்றும் தூண்டுவோருக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய முக்கிய உரையில் தெரிவித்திருக்கிறார்.
பாதுகாப்பு படையின் உறுப்பினர்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவுக்கு அண்மைய சில வாரங்களாக நடைபெற்ற சில சம்பவங்களைத் தொடர்ந்து அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார். பாதுகாப்பு படையினருடன் நாங்கள் சந்திப்பு நடத்தியுள்ளோம் . நாட்டின் பாதுகாப்புக்கு மிரட்டலை ஏற்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தாம் உறுதியளிப்பதாக அன்வார் கூறினார்.
இறைவனின் அருளால் நிலைமை இப்போது அமைதியாகவும் கட்டுப்பாட்டிலும் உள்ளது. நம் நாட்டின் அமைதியான சூழ்நிலையையும் துரித பொருளாதார வளர்ச்சியையும் சீர்குலைக்கும் முயசிகளை அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்தார்.
இது குறித்து அன்வார் விரைவாக விவரிக்கவில்லை என்றாறும் , ஜோகூரில் உள்ள போலீஸ் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அவர் குறிப்பிட்டதாக நம்பப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை, உலு திராம் காவல் நிலையத்தில் துப்பாக்கி மற்றும் பராங் கத்தியால் தாக்கிய ஆடவன் ஒருவன் இரண்டு போலீஸ்காரர்களை கொன்றதோடு மற்றொருவருக்கு காயம் விளைவித்தான். எனினும் தாக்குதல் நடத்திய அந்த நபர் அந்த இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டான்.