கோலாலம்பூர், டிசம்பர் 8 – ILKKM எனப்படும் மலேசிய சுகாதார அமைச்சின் பயிற்சிக் கழகங்களில் இவ்வாண்டு துணை மருத்துவப் படிப்பை மேற்கொள்ள, 72,208 இந்திய மாணவர்கள் விண்ணப்பத்திருந்தனர்.
எனினும் அவர்களில் வெறும் 794 பேர் அல்லது 1.1 விழுக்காட்டினர் மட்டுமே தகுதிகளைப் பூர்த்திச் செய்தனர்.
அவர்கள் மட்டுமே பொதுச் சேவை நுழைவுக்கான இணைய மதீப்பீட்டுக்குத் தகுதிப் பெற்று, மருத்துவ நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியது.
நடப்பாண்டில் மருத்துவ உதவியாளர் பயிற்சிகளுக்கான இந்திய மாணவர் சேர்க்கைக் குறித்து, மேலவையில் செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் எழுப்பியக் கேள்விக்கு, சுகாதார அமைச்சு அவ்வாறு பதிலளித்தது.
இந்த ILKKM மையங்களில் தற்போது 8,524 மாணவர்கள் 13 துணை மருத்துவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களில் 71 மாணவர்கள் அல்லது 1 விழுக்காட்டினர் இந்தியர்கள் ஆவர்.
SPA எனப்படும் பொதுச் சேவை ஆணையம் வாயிலாக அப்பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்க இந்திய மாணவர்களை சுகாதார அமைச்சு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.
துணை மருத்துவப் படிப்பை அனைத்து நிலையிலான மக்களுக்கும் விளம்பரப்படுத்த, சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு உள்ளிட்ட தரப்புடன் வியூக ஒத்துழைப்பை மேற்கொண்டு வருகிறது.
மடானி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் வேலை வாய்ப்புக் கண்காட்சிகளை நடத்துவது, பள்ளிகளில் வேலை வாய்ப்பு கருத்துரங்குகளை ஏற்பாடு செய்வதும் அவற்றிலடங்கும் என அமைச்சு கூறியது.
இவ்வேளையில் அமைச்சின் பதில் குறித்து டத்தோ சிவராஜ் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.
விண்ணப்பம் செய்த 72,000 இந்திய மாணவர்களில் வெறும் 1 விழுக்காட்டினர் மட்டுமே தகுதிப் பெற்றிருப்பதாகக் கூறப்படுவது ஏமாற்றம் அளிப்பதாக வணக்கம் மலேசியாவிடம் அவர் கூறினார்.
அப்பயிற்சிக்கான விண்ணப்பத் தகுதிகள் போன்ற விவரங்களை அமைச்சு வெளியிட்டால், இனிவரும் காலங்களில் மேலும் ஏராளமான இந்திய மாணவர்கள் துணை மருத்துவப் பயிற்சியை மேற்கொள்ள வாய்ப்பேற்படுமென்றும் சிவராஜ் கேட்டு கொண்டார்.