கோலாலம்பூர், ஆகஸ்ட் 6 – தெக்குனில் கடனுதவி பெற்ற தொழில்முனைவோர்கள் மீண்டும் கடனுதவிக்கு விண்ணப்பம் செய்ய முடியும் எனத் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் இன்று அறிவித்தார்.
எனினும், கடனுதவி பெற்றிருப்பவர்கள் முறையாகச் பெற்ற கடனை செலுத்தி மீதம் 50 விழுக்காட்டிற்கும் குறைவாக கடன் நிலுவையில் இருப்பவர்கள் மீண்டும் கடனுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் ரமணன் விளக்கமளித்தார்.
வணிகத் துறையில் அதிகமான இந்தியர்கள் ஈடுபடுவதற்கு மட்டுமின்றி அடுத்த நிலைக்கு உயர்த்துவதற்கும் தெக்குன், ஸ்பூமி கோஸ் பிக், அமானா இக்தியார் ஆகிய கடனுதவி திட்டங்கள் முக்கிய பங்கை வகிக்கிறது.
கடந்த ஏப்ரல் 3ஆம் திகதி முதல் ஜூலை 28ஆம் திகதி வரை 135 தொழில்முனைவோருக்கு 5.56 மில்லியன் ரிங்கிட் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை 26,726 இந்தியத் தொழில் முனைவோருக்கு 46 கோடியே 28 லட்சம் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு பிரத்தியேக வியாபாரக் கடனுதவிகளை வழங்கி வரும் நிலையில், இந்திய தொழில்முனைவோர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை நேரடியாகக் கேட்டுக் கலந்துரையாடல் வகையில் இன்றைய வணக்கம் மடானி நிகழ்ச்சி நடைபெற்றதாகத் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்தியச் சமுதாய மக்களுக்கு உதவ வேண்டும் என்ற அடிப்படையில்தான் மடானி அரசாங்கத்தின் மூலமாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உதவிகளை வழங்கி வருகிறார்.
இந்த வாய்ப்புகளை அனைவரும் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் வலியுறுத்தினார்.
இன்று கோலாலம்பூர் பிரிமேரா தங்கும் விடுதியில் நடைபெற்ற வணக்கம் மடானி நிகழ்ச்சியில் கோலாலம்பூர், சிலாங்கூர், பேராக், பாஹாங், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 500 தெக்குன் கடனுதவி பெற்றவர்கள் இக்கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.