கோலாலம்பூர், ஜனவரி-17,இந்தியத் தொழில்முனைவோரின் கரங்களை வலுப்படுத்தும் முயற்சியில் தெக்குன் – ஸ்பூமி கடனுதவித் திட்டத்திற்கு வரலாற்றில் இல்லாத அளவுக்கு 100 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியத் தொழில்முனைவோர் தங்களின் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ளும் வகையில் மடானி அரசாங்கம் இப்புத்தாண்டில் அவ்வறிவிப்பை வெளியிட்டது.
2025 வரவு செலவு அறிக்கையில் தெக்குன் நேஷனல் வாயிலாக பிரதமர் 30 மில்லியன் ரிங்கிட் நிதியை அறிவித்த நிலையில், தெக்குனின் சொந்த நிதியிலிருந்து 70 மில்லியன் ரிங்கிட் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் வழி நாடு முழுவதும் 5,000-க்கும் மேற்பட்ட இந்தியத் தொழில் முனைவோர் பயனடைவர் என, தொழில்முனைவோர் மற்றும் கூட்டறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்த 100 மில்லியன் ரிங்கிட் நிதியில் 50 மில்லியன் ரிங்கிட் SPUMI திட்டத்திற்கும், மீதி 50 மில்லியன் ரிங்கிட் SPUMI GOES BIG திட்டத்திற்கும் பயன்படுத்தப்படும்.
இவ்விருத் திட்டங்கள் வாயிலாக கடனுதவிக்கு விண்ணப்பிக்கும் இந்தியத் தொழில்முனைவர்களுக்கு ஏழே நாட்களில் முடிவு தெரியும்.
அடையாள அட்டை நகல், SSM பதிவுச் சான்றிதழ், வங்கிக் கணக்கறிக்கை, வணிகப் புகைப்படங்கள், LHDN பதிவு பாரம் போன்ற ஆவணங்கள், விண்ணப்பப் படிவங்களுடன் வர வேண்டும்.
வழக்கம் போல், இக்கடனுதவி விநியோகத்தையும் தாமே நேரில் கண்காணிக்கவிருப்பதாக, டத்தோ ஸ்ரீ ரமணன் சொன்னார்.
2007-ஆம் ஆண்டு அறிமுகம் கண்டதிலிருந்து இதுவரை 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் 26,804 இந்தியத் தொழில்முனைவர்கள் இந்த SPUMI திட்டத்தில் பயனடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.