தெலுக் இந்தான்: பொய் புகார் அளித்த 48 வயது பெண் கைது – சிறைத்தண்டனை எச்சரிக்கை

தெலுக் இந்தான், ஜூலை-2 – பேராக், தெலுக் இந்தானில் தமக்கு நேராத ஒரு கொள்ளைச் சம்பவத்தை நேர்ந்ததாகக் கூறி, போலீஸிடம் பொய் புகார் அளித்த 48 வயது பெண்மணி ஒருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
ஜூன் 30-ஆம் தேதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த அந்தப் பெண், Taman Ros வாகன நிறுத்துமிடத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தமது பணப்பை மற்றும் ரொக்கப் பணத்தைப் பறித்துச் சென்றதாகக் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, தமது தனிப்பட்டப் பிரச்னைகள் காரணமாகவே இவ்வாறு பொய் புகார் அளித்ததாக அந்தப் பெண் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து கடமையிலிருந்த அரசு ஊழியருக்குப் பொய்யான தகவலை வழங்கிய குற்றத்திற்காக, அவர் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஹிலிர் பேராக் மாவட்ட போலீஸ் தலைவர் Chua Kok Lian கூறினார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை, 2,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படலாம்.
இது போன்ற பொய் புகார்கள், உண்மையான அவசரக் காலங்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டிய போலீஸாரின் நேரத்தையும் மனித ஆற்றலையும் வீணடிப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.



