90 நாட்களுக்குப் பின் புதுப்பித்தால் RM113 கட்டணம்: OCI அட்டை வைத்திருப்பவர்களுக்கான புதிய விதி

கோலாலம்பூர், ஜூலை-2 – கோலாலம்பூரிலுள்ள இந்தியத் தூதரகம், இந்திய வம்சாவளியினர் வைத்துள்ள OCI அட்டைகளுக்கான புதிய மற்றும் திருத்தப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இதன்படி, OCI அட்டை வைத்திருப்பவர்கள் தங்களின் கடப்பிதழை புதுப்பித்த 90 நாட்களுக்குள், புதியக் கடப்பிதழ் விவரங்களை OCI இணையப் பக்கத்தில் உள்ள ‘இதர சேவைகள்’ (Miscellaneous Services) பிரிவின் கீழ் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
90 நாட்களுக்குள் செய்யப்படும் இந்த இயங்கலை சேவை முற்றிலும் இலவசமாகும்.
ஆனால், 90 நாட்களுக்குப் பிறகு விவரங்களைப் புதுப்பித்தால், அதற்கு 113 ரிங்கிட் 13 சென் கட்டணமாக விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காகத் தூதரக இணையத்தளத்தில் ‘OCI Passport Late Update’ பிரிவின் கீழ் தனியாக அனுமதி (Appointment) பெற வேண்டும்.
மேலும், கணவன்-மனைவி (Spouse) பிரிவின் கீழ் புதிதாக வழங்கப்படும் OCI அட்டைகளின் ஆரம்பக் காலச் செல்லுபடியாகும் காலம் இனி 5 ஆண்டுகளாக மட்டுமே இருக்கும் என்றும், அதன் பிறகு தம்பதியரின் நேரடி நேர்காணலுக்குப் பிறகே அது புதுப்பிக்கப்படும் என்றும் தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.



