கோலாலம்பூர், மே 6 – ஒரே வாரத்தில் தேசியக் கால்பந்தாட்டக்காரர்களை உட்படுத்திய இரண்டாவது சம்பவமாக, Faisal Halim மீது எரிதிராவக வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் கோத்தா டாமான்சாராவில் உள்ள பேரங்காடியொன்றில் ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் Faisal மீது மர்ம நபர்கள் acid வீச்சு தாக்குதல் நடத்தினர்.
ஆசியக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் மிக அழகான கோலடித்தருக்கான விருதை வென்றவரான Faisal-லுக்கு, அதில் இரண்டாம் கட்ட தீப்புண் காயம் ஏற்பட்டிருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
Acid பட்டு தோல் வெந்துப் போனதில் உரிய சிகிச்சை வழங்கப்பட்டு Faisal-லின் உடல் நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இவ்வேளையில் Faisal மீதான அத்தாக்குதல் குறித்து அதிர்ச்சித் தெரிவித்த இளைஞர் – விளையாட்டுத் துறை அமைச்சர் Hannah Yeoh, தாக்குதல் நடத்தியவர்களை போலீஸ் விரைந்துப் பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
விளையாட்டில் வன்முறை கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
Harimau Malaya அணியில் Faisal-லின் சகாவான Akhyar Rashid, கடந்த வியாழக்கிழமை குவாலா திரங்கானுவில் கொள்ளையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காரில் இருந்து இறங்கிய வேகத்தில் அவரை மர்ம நபர் லட்டியால் தலையிலும் உடம்பிலும் தாக்கினார்.
Akhyar-ரின் பணப்பை மற்றும் கைப்பேசியை எடுத்துக் கொண்டு சந்தேக நபர் தப்பியோடினான்.
காயங்களுடன் அவர் சுல்தானா நூர் சஹிரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இப்படி அடுத்தடுத்து தேசிய கால்பந்தாட்டக்காரர்களைக் குறி வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பது உள்ளூர் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.