கோலாலம்பூர், ஜூலை 10 – தேசிய சேவை பயிற்சி திட்டம் புதிய பாணியில் மற்றும் புதிய கோட்பாட்டுடன் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்னதாக அறிமுகப்படுத்தப்படும். இந்த பயிற்சிக்கான பாடத்திட்டங்களை தயார்படுத்தும் நடவடிக்கை தற்போது இறுதிவடிவம் காணப்பட்டுள்ளதோடு கட்டம் கட்டமாக இது தயார்படுத்தப்படும் என தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ காலிட் நோர்டின் தெரிவித்தார்.
தேசிய பயிற்சி திட்டத்திற்கு முன்னதாக பள்ளி நிலையில் பயிற்சியில் பங்கேற்பவர்களை தேர்வு செய்வதற்காக 17 வயதை அடைந்தவர்கள் இத்திட்டத்திற்கு அழைக்கப்படுவார்கள். பள்ளி புறப்பாட நடவடிக்கையின்போது நான்காம் படிவ மாணவர்கள் மட்டுமே இந்திட்டத்தில் உட்படுத்தப்படுவார்கள் என காலிட் நோர்டின் கூறினார். அடிப்படை பயிற்சி திட்டத்திற்குப் பின் 17 வயதுடையவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோர் தேசிய சேவை திட்டத்தின் அடிப்படை பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
நாடு முழுவதிலும் 13 தொண்டூழிய ராணுவ முகாம்களிலும், 20 பொது பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்வேறு தொழிற்நுட்ப கல்லூரிகளிலும் பயிற்சி நடைபெறும். குடிமை விவகாரங்கள் 30 விழுக்காடும், இதர 70 விழுக்காடு ராணுவ பாணியிலான பயிற்சிகளையும் தேசிய பயிற்சி சேவை கொண்டிருக்கும் என இன்று நாடாளுமன்றத்தில் ஜெலி நாடாளுமன்ற உறுப்பினர் ஸஹரா கெச்சிக் ( Zahara Kechik ) எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது காலிட் நோர்டின் தெரிவித்தார். சுய நம்பிக்கை, நாட்டுப்பற்று, தேச உணர்வு மற்றும் நாட்டின் ஒற்றுமை உணர்வு போன்ற அம்சங்களை வலியுறுத்தும் வகையில் தேசிய சேவை பயிற்சி திட்டத்திற்கான உள்ளடக்கம் கொண்டிருக்கும் என அவர் கூறினார்.